சிவன் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட 103 தங்க நாணயங்கள்!! இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு!!

By : G Pradeep
திருவண்ணாமலையின் ஜவ்வாதுமலை வட்டத்தில் இருக்கும் கோவிலூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மூன்றாம் ராஜராஜ சோழன் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட ஆதி சிவன் கோவில் உள்ளது. இக்கோவிலின் கருவறையில் அமைந்திருக்கும் திருமூலநாதர் சன்னதி மற்றும் ராஜ கோபுரம் போன்றவை பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் தற்பொழுது புனரமைப்பு பணிகளுக்காக அரசு ரூ.2.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் கோவில் கருவறையில் கட்டுமான பணிகள் மேற்கொண்ட பொழுது அங்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த சிறிய பானையில் 103 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆணையர் சண்முகசுந்தரம் தங்க நாணயங்களை கைப்பற்றி செயல் அலுவலர் சிலம்பரசனிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அந்த தங்க நாணயங்கள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
