தேசிய தூய்மை கங்கை இயக்கம்.. ரூ. 1,062 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மோடி அரசு ஒப்புதல்..
By : Bharathi Latha
தேசிய தூய்மை கங்கை இயக்கத்தின் தலைமை இயக்குநர் திரு ராஜீவ் குமார் தலைமையில் நடைபெற்ற 57-வது செயற்குழு கூட்டம் ரூ. 1,062 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது. கங்கை நதியின் பாதுகாப்பு, தூய்மையை நோக்கமாகக் கொண்ட முக்கிய திட்டங்கள், மகா கும்பமேளா 2025-ன் போது தகவல், கல்வி மற்றும் தொடர்பு நடவடிக்கைகள் இதில் அடங்கும். பீகாரின் கதிஹார் நகரின் வடிகால் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மொத்தம் ரூ. 350 கோடி செலவாகும்.திட்டத்திற்கும் உத்தரபிரதேசத்தின் அலிகரில், 488 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டத்திற்கும் பீகாரின் சுபாலில் ரூ.76.69 கோடி செலவில் மூன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆறு இடைமறிப்பு மற்றும் திசைதிருப்பல் கட்டமைப்புகளை நிர்மாணிப்பது சம்பந்தப்பட்ட திட்டத்திற்கும் உத்தராகண்டில், தற்போதுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் இணை சுத்திகரிப்புக்கான ரூ. 2.5 கோடி திட்டத்திற்கும் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்தது.
மகா கும்பமேளா 2025-ன் போது தூய்மை மற்றும் விழிப்புணர்வை அதிகரிக்க, ரூ .30 கோடி மதிப்புள்ள (தகவல், கல்வி மற்றும் தொடர்பு) செயல்பாட்டு அடிப்படையிலான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் மேளா நடைபெறும் பகுதி மற்றும் நகரத்தை 'வண்ணம் தீட்டுதல்' மற்றும் சுவரோவிய கலை மூலம் அலங்கரிப்பதும் அடங்கும். மேம்பாலங்கள், பெரிய கட்டிடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற பல்வேறு இடங்கள் கங்கை தொடர்பான கருப்பொருள்களை சித்தரிக்கும் சுவர் ஓவியங்களால் அலங்கரிக்கப்படும். கூடுதலாக, நமாமி கங்கை திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட தலையீடுகள் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும் வகையில் மேளா நடைபெறும் பகுதியில்,ஒரு முக்கிய இடத்தில் 45 நாள் கண்காட்சி நடைபெறும். இந்த முயற்சியின் போது, தூய்மை மற்றும் கங்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கண்காட்சித் திடல் முழுவதும் 1,500 கங்கா சேவா பதாகைகள் வைக்கப்படும்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குக்ரெயில் முதலைகள் மறுவாழ்வு மையத்தில் நன்னீர் ஆமைகள் மற்றும் முதலைகள் பாதுகாப்பு, இனப்பெருக்க திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. நமாமி கங்கை இயக்கம்-2 திட்டத்தின் கீழ் ரூ.2 கோடி செலவில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். அழிந்து வரும் உயிரினங்களை மீட்டெடுப்பதில் இந்த மையம் முக்கியப் பங்கு வகிக்கிறது. கங்கை நதி மற்றும் அதன் கிளை நதிகளில் இந்த இனங்களின் சாத்தியமான இனப்பெருக்க எண்ணிக்கையை புத்துயிர் பெறச் செய்வதை இந்த விரிவாக்கப்பட்ட இனப்பெருக்கத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Input & Image courtesy: News