தமிழ்நாட்டில் தொழிலாளர்களுக்காக 11 ESI மருத்துவமனைகள் உள்ளது: மத்திய அமைச்சர் கூறிய தகவல்!

By : Bharathi Latha
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொழிலாளர் அரசு ஈட்டுறுதி கழகம் (இஎஸ்ஐசி), சமூகப் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் இஎஸ்ஐ சட்டம், 1948-ல் வரையறுக்கப்பட்டுள்ளபடி, மாதத்திற்கு ரூ.21000/- வரை ( மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25,000/-) ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் இ.எஸ்.ஐ சட்டத்தின் கீழ் உள்ளனர். அவர்களின் இ.எஸ்.ஐ திட்டத்தின் கீழ் கிடைக்கும் சலுகைகளைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
ஊதிய உச்சவரம்பு (உயர் சம்பள வரம்பு) திருத்தம் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. இ.எஸ்.ஐ சட்டம், 1948-ன் கீழ் காப்பீட்டுக்கான ஊதிய உச்ச வரம்பில் கடைசி திருத்தம் 01.01.2017 அன்று செய்யப்பட்டது. இதில் ஊதிய வரம்பு மாதத்திற்கு ரூ.15,000/- இலிருந்து ரூ.21,000/- ஆக உயர்த்தப்பட்டது. தமிழ்நாட்டில் இ.எஸ்.ஐ சார்பில் 3 மருத்துவமனைகளும், மாநில அரசு சார்பில் 8 இ.எஸ்.ஐ மருத்துவமனைகளும் செயல்படுகின்றன. இத்தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா மக்களவையில் கேள்வி நேரத்தின் போது எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்
