பிரிட்டன் : 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசர் பாதங்கள் கண்டுபிடிப்பு!

By : Bharathi Latha
உலகம் தோன்றியதில் இருந்த பல்வேறு உயிரினங்கள் நம்முடைய பூமியில் வாழ்ந்து வந்துள்ளன. அத்தகைய உயிரினங்களுக்கான புதை படிமங்கள் கிடைக்கும் போதுதான் அவை நம் பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஆராய்ச்சியாளர்கள் இது பற்றி ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் எந்த நாட்டில் இத்தகைய புதைபடிவங்கள் கிடைக்க படுகின்றதோ அந்த நாடு தன்னுடைய பலத்தை அதிகரித்து கொள்கிறது என்றே சொல்லலாம்.
அந்த விதத்தில் தற்பொழுது, இங்கிலாந்து நாட்டில் 6 வகையான டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் அழிந்து போன 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தய உயிரினமாகும். டைனோசர் பாத சுவடானது உயர்ந்த மலைப்பகுதியிலும் கடற்கரைப் பகுதியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஹேஸ்டிங்ஸ் மியூசியம் அண்ட் ஆர்ட் கேலரி தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் டைனோசர் இனங்களின் பாத சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டது இது தான் முதல் முறை என தொல்லுயிரியல் துறை பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்துள்ளார். இது பார்ப்பதற்கு மிக கரடுமுரடாக காணப்படும் எனவும் இந்த டைனோசர்கள் ஆங்கிலோசார்ஸ் Ankylosaurs என்ற வகையைச் சார்ந்தது என்றும் தெரிவித்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிய வகை டைனோசர்களின் பாத சுவடுகள் ஃபோக்ஸ்டோன் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் டேவிட் மார்டில் தெரிவித்துள்ளார்.
