இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மொபைல் செயலி: 12 கோடியே எட்டிய வாடிக்கையாளர்கள்!

By : Bharathi Latha
அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியில் 2018-ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர். தமிழ்நாட்டில் புதுமைப் பெண், தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட கணக்குகள், முதியோர் உதவித்தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம் /உதவித்தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும். தொடக்க காலத்தில் தொடங்கப்பட்ட கணிசமான கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது. சேமிப்பு கணக்கிற்கு வாரிசு நியமிப்பதன் மூலம், கணக்குதாரர் மறைவிற்குப் பிறகு சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையை எளிதாகவும், விரைவாகவும் பெறுவதற்கு வகை செய்கிறது.
இதன்படி எங்களின் அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசு நியமனம் செய்வதற்கு தேவையான வசதி மாநிலம் முழுவதும் உள்ள அஞ்சலகங்களில் உள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் கூகுள் பிளேஸ்டோர் மூலம் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கியின் மொபைல் செயலி மூலம் அவரவர்கள் வாரிசு நியமனம் செய்வது மற்றும் மாற்றம் செய்வது ஆகியவற்றை மேற்கொள்ள முடியும்.
மேலும் இந்திய அஞ்சலக பேமெண்ட்ஸ் வங்கி செயலி மற்றும் அஞ்சல்காரரின் உதவியுடன் தங்கள் கணக்குகளில் ஆதார் எண்ணை இணைத்து அரசின் நேரடி மானிய உதவிகளையும் எளிதில் பெற முடியும். அதுமட்டுமின்றி, இந்த வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கையும் இணைத்து ஆன்லைன் வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த செயலி வாயிலாக செல்வமகள், தங்கமகன், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிதான முறையில் ஆன்லைன் வாயிலாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
