Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ரூ.1,225 கோடியில் சாகர்மாலா திட்டங்கள்.. செயல்படுத்த மோடி அரசு ஒப்புதல்..

தமிழகத்தில் ரூ.1,225 கோடியில் சாகர்மாலா திட்டங்கள்.. செயல்படுத்த மோடி அரசு ஒப்புதல்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Aug 2024 1:45 PM GMT

தமிழ்நாட்டில் ரூ. 1,225 கோடி மதிப்பிலான 22 சாகர்மாலா திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால் கூறி உள்ளார். துறைமுகங்கள், கப்பல் துறை சார்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு, மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால் விளக்கம் அளித்தார். தேசிய நீர்வழித் தடங்கள் மூலம் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார். இந்தியாவின் உள்நாட்டு நீர்வழிப் பாதைகளின் திறனை மேம்படுத்த பல்வேறு முக்கிய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உலக வங்கியின் ஆதரவுடன் நீர்வழித்தட மேம்பாட்டுத் திட்டம் எனப்படும் ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் கீழ் குறிப்பிடத்தக்க மேம்பாட்டுத் திட்டங்கள் நடந்து வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார். 26 புதிய தேசிய நீர்வழிப் பாதைகளை அடையாளம் கண்டு மேம்படுத்தத் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த விரிவாக்கம் மாற்று போக்குவரத்து முறைகளை வழங்குவதையும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிடையே நீர்வழி இணைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என அவர் தெரிவித்தார்.


இதில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாகர்மாலா திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முதலீடுகள், முன்முயற்சிகள் குறித்தும் அவர் விவரித்தார். கடந்த மூன்று ஆண்டுகளில், துறைமுக உள்கட்டமைப்பு, கடலோர கப்பல் நிறுத்துமிடங்கள், மீன் பிடித் துறைமுகங்களை உள்ளடக்கிய துறைமுகம் தொடர்பான 22 திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,225 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். கூடுதலாக, பல்வேறு அமைச்சகங்களுடன் இணைந்து கடலோர மாவட்டங்களில் திறன் மேம்பாடு, பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட முயற்சிகளுடன், நான்கு மீன்பிடி துறைமுக திட்டங்களுக்கு ரூ. 410 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். துறைமுகங்களின் விரிவாக்கம், மேம்பாடு தொடர்பாகப் பேசிய சர்பானந்த சோனோவால், பசுமை ஹைட்ரஜன், அம்மோனியா ஆலைகளின் வளர்ச்சிக்காக வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 500.82 ஏக்கர் நிலத்தை பல்வேறு தொழிற்சாலைகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாகத் தெரிவித்தார். இது நிலையான எரிசக்தி மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி ஆகியவற்றில் இத்துறையில் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News