ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14 வரை கால அவகாசம்!
நாடு முழுவதும் கட்டணம் இன்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
By : Karthiga
நாடு முழுவதும் ஆதார் அட்டை என்பது முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது .இந்தியாவில் 40 கோடியே 21 லட்சத்து 68,749 பேர் ஆதார் அட்டை பெற்றுள்ளனர்.அரசின் பல்வேறு நலத்திட்ட சேவைகளுக்கு ஆதார் அட்டை அவசியம். பல துறைகளில் ஆதார் அட்டைகளை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆதார் தொடர்பான மோசடிகளை தடுக்க ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறை விதிகளை கடந்த 2016 ஆம் ஆண்டு ஆதார் ஆணையம் கொண்டு வந்தது.
ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறையை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும். அந்த அடிப்படையில் ஆதார் அட்டைகளை புதுப்பிக்க ஆதார் ஆணையம் மக்களை அறிவுறுத்தி வருகிறது.ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி, புகைப்படம் போன்ற விவரங்களை புதுப்பித்துக் கொள்ள வாக்காளர் அடையாள அட்டை ,குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணங்களுடன் அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தை அணுகலாம் என அறிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை கட்டணமின்றி ஆதார் அட்டை புதுப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை ஆதாரை புதுப்பிக்காதவர்கள் செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும் என்றும் 14 ஆம் தேதிக்குள் புதுப்பிக்காதவர்கள் கட்டணம் செலுத்தி புதுப்பிக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.