மீன்வளத்துறைக்கு ரூ.1573.73 கோடி நிதி ஒதுக்கீடு: 64 திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அனுமதி!

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தியைப் பெருக்கவும், அதன் மூலம் மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போரின் வருமானத்தை அதிகரிக்கவும், மத்திய அரசின் மீன்வளத்துறை, தமிழக அரசுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. உள்நாட்டு மீன்வளர்ப்போருக்கு புதிய நன்னீர் மீன் குஞ்சு பொரிப்பகங்கள், மீன் வளர்ப்புக் குளங்கள், இடுபொருட்கள் உள்ளிட்ட குட்டைகள், நன்னீர் உயிரி குட்டைகள், மறுசுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு அமைப்புகள் மற்றும் மீன் தீவன அரங்குகளை அமைத்திட நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. மிதவைக்கூண்டுகளில் மீன்வளர்ப்பு மற்றும் மாற்று வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, ஒருங்கிணைந்த நீர்த்தேக்க மேம்பாட்டுத் திட்டத்திற்காக அரசு ரூ.11.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
கடல்சார் தொழிலைப் பொறுத்து தமிழ்நாட்டின் 07 மாவட்டங்களில் சுமார் 2,000 மீனவ குடும்பங்கள் கடற்பாசி வளர்ப்பில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. இது குறிப்பாக மீனவ பெண்களுக்கு ஒரு மாற்று வருமான ஆதாரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குளிரூட்டப்பட்ட வாகனங்கள், பனிக்கட்டி பெட்டிகளுடன் கூடிய இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், நவீன மீன் சில்லறை விற்பனை அங்காடிகள், அங்காடிகள் மற்றும் உயிருள்ள மீன் விற்பனை நிலையங்கள் ஆகியவைகளுக்கு உதவி வழங்கப்பட்டு, மீனவர்களின் வருமானத்தை அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மீன்வளத் துறைக்கான உட்கட்டமைப்பு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய அரசின் மீன்வளத்துறை, ரூ.7,522.48 கோடி மொத்த நிதியுடன் 'மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி' என்ற பிரத்யேக நிதியத்தை உருவாக்கியுள்ளது. இதன்படி மீன்வள உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ஆண்டுக்கு 3 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்படுகிறது. இந்த நிதியத்தின் கீழ் ரூபாய் 1573.73 கோடி மதிப்பீட்டில் 64 திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளன.