ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: கைது செய்யப்பட்ட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்!

By : Bharathi Latha
உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தற்காலிக ஆசிரியராக ஜான் சிபு மானிக் என்பவர் 2018-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். இவரை நிரந்தரமாக்கபள்ளி நிர்வாகம் சார்பில் 2019-ஆம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ் காலதாமதம் செய்து வந்த நிலையில், ஜான் சிபு மானிக் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஜான் சிபு மானிக்கை நிரந்தர ஆசிரியராக பணி அமர்த்த 2024 ஜூன் மாதம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த ஜான் சிபு மானிக்கை இரண்டு மாதங்கள் அலைக்கழித்த தொடக்ககல்வி அலுவலர் சந்தோஷ், ரூ. 5 லட்சம் லஞ்சம் தந்தால் 2018 முதல் உள்ள பணிக்காலத்தை போட்டு உத்தரவு தருவதாகவும், இல்லையென்றால் குறைத்து வழங்கினால் பல லட்ச ரூபாய் இழக்க நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் பிப்ரவரி 18-ஆம் தேதி திரும்பவும் ஆசிரியர் ஜான் சிபு மானிக்கை அழைத்த தொடக்க கல்வி அலுவலர் சந்தோஷ், முன்பண மாக ரூ.2 லட்சம் தரும்படி கூறியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஜான்சிபுமானிக், இது குறித்து லஞ்சஒழிப்பு துறைஆய்வாளர் சண்முகவடிவிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்து உள்ளனர்.
