Kathir News
Begin typing your search above and press return to search.

வேகமெடுக்க போகும் சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்ட பணிகள்: 65% செலவை ஏற்ற மத்திய அரசு!

வேகமெடுக்க போகும் சென்னை மெட்ரோ 2 ஆம் கட்ட திட்ட பணிகள்: 65% செலவை ஏற்ற மத்திய அரசு!
X

SushmithaBy : Sushmitha

  |  6 Oct 2024 5:57 AM GMT

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் அளித்ததை அடுத்து, அவற்றிற்கான 65 சதவிகித நிதியை மத்திய அரசு வழங்கும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணி திட்டம் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த செலவு ரூபாய் 63,246 கோடி. இந்தத் திட்டத்தின் ஆரம்ப காலத்தில் முழுக்க முழுக்க இது மாநில அரசின் திட்டமாக இருந்ததால் அதற்கு மத்திய அரசு 10% நிதியை மட்டுமே செலவிட்டு வந்தது. அதாவது ஏதேனும் ஒரு திட்டம் மாநில அரசின் திட்டமாக இருந்தால் அதற்கு 10 சதவிகித நிதியை மட்டுமே மத்திய அரசு வழங்கும். மற்ற முழு செலவையும் மாநில அரசு தான் ஏற்க வேண்டும். ஆனால் மாநில அரசு போதுமான நிதி இல்லாமல் இந்த திட்டத்தை மெதுவாகவே செயல்படுத்தி வந்தது.


இதனால் இந்த திட்டத்தில் மத்திய அரசின் உதவி வேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வர தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த மாதம் பிரதமர் மோடியை சந்தித்த பொழுது இந்த கோரிக்கையையும் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனை அடுத்து கடந்த வியாழக்கிழமை அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவையில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்ட பணிக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த திட்டத்தில் மத்திய அரசு வழங்க உள்ள நிதி குறித்த தகவல்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.

அதில், மொத்தம் ரூ. 63,246 கோடி மதிப்பீட்டுச் செலவில் 'மத்திய துறை' திட்டமாக, சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு அண்மையில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதுவரை இந்தத் திட்டம், மதிப்பிடப்பட்ட திட்டச் செலவில் சுமார் 90 சதவீதம் அளவிற்கு திட்ட நிதியுதவி முதன்மையாகத் தமிழ்நாடு அரசின் பொறுப்பு என்ற நிலையில் மாநிலத் துறை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வந்தது. மெட்ரோ ரயில் கொள்கை 2017-ன் படி, நிலத்தின் விலை மற்றும் சில பொருட்களைத் தவிர்த்து, திட்டச் செலவில் 10 சதவீதம் நிதியளிப்பதே மத்திய அரசின் பங்காக இருந்தது. இருப்பினும், இருதரப்பு மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து மாநில அரசு ரூ.32,548 கோடி கடனாக நிதி திரட்டுவதில் மத்திய அரசு அதற்கு நேரடியாக உதவி செய்துள்ளது. இதில் இதுவரை சுமார் ரூ.6,100 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய ஒப்புதலின் மூலம், சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவில் ஏறத்தாழ 55 சதவீதத்தை இப்போது மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியுதவியில் ரூ.33,593 கோடி முழுக் கடனும், சமபங்கு மற்றும் சார்நிலைக் கடனான (subordinate debt) 7,425 கோடியும் அடங்கும். எஞ்சிய 35 சதவீத மதிப்பீட்டுச் செலவுக்கு மாநில அரசு நிதியுதவி செய்யும்.

பன்னாட்டு மற்றும் இருதரப்பு மேம்பாட்டு முகமைகளிடமிருந்து பெறப்படும் கடன்கள் மத்திய அரசின் கடனாகக் கருதப்பட்டு, மத்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு நேரடியாக வழங்கப்படும்.மத்திய அரசால் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படுவதற்கு முன், திட்டத்திற்கான கடன் நிதி கிடைக்கச் செய்வது அல்லது ஏற்பாடு செய்வது மாநில அரசு குறித்ததாக இருந்தது.


மத்திய அமைச்சரவை ஒப்புதலால், இதர வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.33,593 கோடி அளவுக்கு நிதியளிக்க மாநில அரசின் பட்ஜெட் நிதி ஆதாரம் விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, கடன் திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்கள் மீது மறு பேச்சுவார்த்தை நடத்த, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (lapan International Cooperation Agency), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank), ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank), புதிய வளர்ச்சி வங்கி (New Development Bank) ஆகிய இருதரப்பு மற்றும் பன்னாட்டு முகமைகளை நிதி அமைச்சகம் அணுகும்.

கடன், திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அது தொடர்பான ஆவணங்ளில் இந்த மாற்றங்களுக்கான நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒத்துழைப்புடன் இது விரைந்து முடிக்கப்படும். கடனை திருப்பிச் செலுத்தும் பொறுப்பு சிஎம்ஆர்எல் நிறுவனத்தைச் சார்ந்தது. திருப்பிச் செலுத்துதல், பொதுவாக குறைந்தபட்சம் 5 ஆண்டு மாரடோரியம் (moratorium) காலத்திற்குப்பின், அதாவது ஏறத்தாழ திட்டம் முடிந்த பின் தொடங்கும். கடனைத் திருப்பிச் செலுத்தும் நிலையில் சி.எம்.ஆர்.எல். இல்லாத பட்சத்தில், அந்த ஆண்டுகளில் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏதுவாக அந்த நிறுவனத்திற்கு நிதி உதவி வழங்குவது மாநில அரசின் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News