விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 2000 கோடி நிதி விடுப்பு- மோடியின் முதல் கையெழுத்து!
விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் 20,000 கோடி ரூபாய் வழங்குவதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கையெழுத்திட்டார்.
By : Karthiga
மூன்றாவது முறையாக பதவியேற்ற பின் தன் முதல் அதிகார பணியாக இதை அவர் செய்தார். விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் பி.எம்.கிசான் 2019 அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படும். ஆதார் அடிப்படையில் அவர்களுடைய வங்கி கணக்கில் இந்தத் தொகை நேரடியாக செலுத்தப்படும். இதுவரை 2.42 லட்சம் கோடி ரூபாய் 11 கோடி விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றார். நேற்று அவர் தன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். புதிய அரசின் முதல் உத்தரவாக 9.3 கோடி விவசாயிகளுக்கு 20,000 கோடி ரூபாய் வழங்கும் கோப்பில் அவர் கையெழுத்து இட்டார். இதைத்தொடர்ந்து இந்த அரசு கூறியுள்ளதாவது:-
இந்த அரசு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. அதனால் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் கோப்பில் முதல் கையெழுத்திடுவது சிறப்பானது. விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளதாவது:-
ஏற்கனவே உள்ள திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்குவதை ஏதோ புதிது போல் காட்டுகின்றனர். பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் உடனடியாக வேளாண் விலை பொருள்களுக்கு எம்.எஸ்.பி எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பூர்வ உறுதியளிக்க வேண்டும். விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதுடன் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
SOURCE :Newspaper