Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா மையத்தில் மருத்துவரை தாக்கிய கும்பல்- 24 பேர் கைது!

கொரோனா மையத்தில் மருத்துவரை தாக்கிய கும்பல்- 24 பேர் கைது!
X

ShivaBy : Shiva

  |  3 Jun 2021 9:03 AM IST

அசாம் மாநிலத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவரை தாக்கிய சம்பவத்தில் 24 பேரை கைது செய்துள்ளதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் ஹோஜாய் என்னும் ஊரில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட முகமது கியாசுதின் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்ததை தொடர்ந்து மருத்துவரை அவரது உறவினர்கள் 24 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த மருத்துவர் வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அஸ்ஸாம் தேசிய சுகாதார மருத்துவர் சங்கம், "ஜூன் 1ஆம் தேதி காலை 11 மணி அளவில் கொரோனா சிகிச்சை மையத்தில் கியாசுதீன் என்பவர் அனுமதிக்கப்பட்டார். இவர் தீவிர நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அதிக வசதிகள் கொண்ட சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைக்குமாறு அங்குள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அவ்வாறு அவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பு 2 மணி அளவில் பணிக்கு வந்த சேனாதிபதி என்ற மருத்துவர் கியாசுதீனுக்கு சிறுநீர் பை மாற்றச் சென்றுள்ளார். மருத்துவர் சிறுநீர் பை மாற்றுவதற்காக சென்று பார்த்தபோது நோயாளி ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் மருத்துவமனையை அடித்து சூறையாடி உள்ளனர். பின்னர் அங்கிருந்த மருத்துவ ஊழியர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மருத்துவ பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பித்து ஓட்டம் பிடித்த நிலையில் மருத்துவர் சேனாதிபதி மட்டும் ஒரு அறையில் மாட்டிக்கொண்டார்.

பின்னர் 24 பேர் கொண்ட கும்பல் அங்கே இருந்த பொருட்களை கொண்டு மருத்துவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். மேலும் அவரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம் மற்றும் செல்போனை பறித்துள்ளனர். இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து விரைந்து நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினர் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட 24 பேரை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அசாம் மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் பெயரை வெளியிட்டு அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News