ஜூன் 25 -ஆம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அறிவித்த மத்திய அரசு!
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட ஜூன் 25-ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
By : Karthiga
மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அரசிதழில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி நெருக்கடி நிலை பிறப்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அப்போது இருந்த மத்திய அரசு முற்றிலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டது. இந்திய மக்கள் அத்துமீறல்களுக்கும் அராஜகங்களுக்கும் உட்படுத்தப்பட்டனர். அரசியல் சாசனம் மீதும் அதன் வலிமை மீதும் இந்திய மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஆகவே நெருக்கடி நிலை காலத்தில் அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்து போராடியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஜூன் 25-ஆம் தேதியை அரசியல் சாசன படுகொலை நாள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
எதிர்காலத்தில் இத்தகைய அதிகார துஷ்பிரயோகத்தை எந்த விதத்திலும் ஆதரிக்கப் போவதில்லை என்று உறுதி பூணவும் இந்நாள் அனுசரிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். "1975 ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அப்பட்டமான சர்வாதிகார மனநிலையுடன் நெருக்கடி நிலையை அமல்படுத்தி ஜனநாயகத்தின் குரல் வளையை நெறித்தார்.எந்த தவறும் செய்யாத லட்சக்கணக்கானோர் சிறையில் தள்ளப்பட்டனர்.
ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது. எனவே ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ஆம் தேதியை அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நெருக்கடி காலத்தில் மனிதத் தன்மையற்ற செயல்களை எதிர்கொண்ட அனைவரும் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பை இந்த நாளில் நினைவு கூறுவோம். ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடிய லட்சக்கணக்கானோருக்கு மரியாதை அளிப்பதற்காக பிரதமர் மோடி தலைமையிலான அரசு இம்முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
SOURCE :Newspaper