மோடி அரசு அதிரடி: சத்தீஸ்கரின் 27 தீவிர மாவோயிஸ்டுகளை ஒழித்துக் கட்டிய பாதுகாப்பு படையினர்!

சத்தீஸ்கரின் நாராயண்பூரில் மேற்கொள்ளப்பட்ட நக்சலைட்டை ஒழிப்பதற்கான போரில், பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 27 தீவிர மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் திரு அமித் ஷா இன்று தெரிவித்தார். இதற்காக பாதுகாப்புப் படையினரை உள்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.
"இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உள்துறை அமைச்சர், நக்சலைட்டுகளை அழிக்கும் போரில் இது ஒரு மைல்கல் சாதனை என்று குறிப்பிட்டுள்ளார். இன்று, சத்தீஸ்கரின் நாராயண்பூரில் நடந்த ஒரு நடவடிக்கையில், நமது பாதுகாப்புப் படையினர் 27 தீவிர மாவோயிஸ்டுகளைக் கொன்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவர்களில் நக்சல் இயக்கத்தின் முதுகெலும்பாக திகழ்ந்த முக்கிய தலைவரும், சிபிஐ-மாவோயிஸ்ட்டின் பொதுச் செயலாளருமான நம்பலா கேசவ் ராவ் என்ற பசவராஜுவும் அடங்குவார். நக்சலைட்டுக்கு எதிரான இந்தியாவின் 30 ஆண்டு காலப் போரில், பொதுச் செயலாளர் பதவியில் இருந்த ஒரு தலைவர் நமது படைகளால் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக நமது துணிச்சலான பாதுகாப்புப் படையினரையும், நிறுவனத்தையும் பாராட்டுகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆபரேஷன் பிளாக் ஃபாரஸ்ட் முடிந்த பிறகு, சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்டிராவில் 54 நக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர், 84 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் என்பதையும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாகவும், 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்க மோடி அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”