கொரோனா தடுப்பூசி அதிகம் வீணடித்த தமிழகம் - 3வது இடம் - அதிர்ச்சி தகவல்!
By : Shiva
கொரோனா தடுப்பூசிகளை வீணடிப்பதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகள் வீணாக்கபடுவதில் மொத்தம் 15.5 சதவீதத்துடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் 37.3 சதவீதத்துடன் ஜார்க்கண்ட் முதலிடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு குறையத் தொடங்கி உள்ள நிலையில் மக்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு மருந்து வைக்கப்பட்டிருக்கும் குப்பியை திறந்தவுடன் அதில் இருக்கும் தடுப்பூசிகளை 10 பேருக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்த வேண்டும். ஆனால் பத்து பேருக்கு செலுத்தாத நிலையில் மீதமுள்ள தடுப்பு மருந்துகள் வீணாகி பயன்படுத்த முடியாமல் போகும். இவ்வாறு தடுப்பூசிகளை வீணாக்குவதில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தடுப்பூசிகளை வீணாக்குவதில் ஜார்கண்ட் மாநிலம் 37.3 சதவீதத்துடன் முதலாவது இடத்திலும், 30.2 சதவீதத்துடன் சட்டீஸ்கர் மாநிலம் இரண்டாவது இடத்திலும், 15.5 சதவீதத்துடன் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மாநிலங்களில் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் (10.8 சதவீதம்), மத்திய பிரதேசம் (10.7 சதவீதம்) தடுப்பு மருந்துகளை வீணடித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தடுப்பூசிகள் வீணாகும் விகிதத்தை ஒரு சதவிகிதத்திற்கு கீழ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக மாநிலங்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் குறைந்தது 5 சதவீத தடுப்பு மருந்துகள் வீணாக்குவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.