தொடர்ந்து 3 ஆண்டுகளாக கூடுதல் தண்ணீர் திறக்கும் கர்நாடகா - டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி!
By : Shiva
தென்மேற்கு பருவமழை அதிகரித்ததன் காரணமாக தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்படும் காவேரி நீரின் அளவு அதிகரித்து வழங்கப்படுவதால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டு தோறும் 177.25 டி.எம்.சி காவிரி நீரை வழங்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய நீரின் அளவை காவேரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. இந்த நீர் வழங்கும் தவணைக் காலம் கர்நாடகாவின் தென்மேற்கு பருவமழை துவங்கும் மாதமான ஜூன் மாதத்திலிருந்து தொடங்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்ததால் காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அனைத்து அணைகளும் நிரம்பி வழிந்தது. இதனால் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்திற்கு கடந்த ஆண்டு 211 டி.எம்.சி காவிரி நீர் கர்நாடகாவில் இருந்து கிடைத்துள்ளது. இது நீதிமன்றம் நிர்ணயித்த அளவை விட அதிகமாகும்.
கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவில் அதிகபட்சமாக ஆகஸ்ட் மாதம், 57.4 டி.எம்.சி., செப்டம்பர் மாதத்தில் 45.1 டி.எம்.சி, அக்டோபரில் 39.7 டி.எம்.சி, நவம்பரில், 23.1 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒதுக்கீட்டு அளவை காட்டிலும் குறைந்த அளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கடந்த ஆண்டு தமிழகத்திற்கு நீதிமன்றம் நிர்ணயித்த அளவை விட அதிக காவிரி நீர் வழங்கப்பட்டுள்ளதால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை,சம்பா பருவ நெல் சாகுபடி இயல்பை விட அதிக அளவில் மேற்கொள்ளப்படும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.