மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 3 புதிய சட்டங்கள்; மக்களின் நல் வாழ்வை உறுதி செய்யும் சட்டங்கள் என அமித் ஷா பேச்சு!
By : Sushmitha
பழைய காலனித்துவ காலத்தின் இந்திய தண்டனைச் சட்டங்களை மாற்றி நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் மத்திய அரசு மூன்று புதிய குற்றவியல் மசோதாகளை உருவாக்கியது. அதன்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த 12ஆம் தேதி மக்களவையில் பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷாசன்ஹிதா, பாரதிய சாக்ஷியா அது மூன்று சட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய மசோதாவை நிறைவேற்றுவதன் விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. மேலும் பழைய குற்றவியல் சட்டங்களை சீரமைக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
இயற்றப்பட்ட புதிய சட்டங்கள் தேடுதல் மற்றும் கைப்பற்றல் நடவடிக்கைகளை வீடியோ எடுப்பதற்கான விதிகளை அறிமுகப்படுத்துகிறது, பயங்கரவாதத்தை வரையறுக்கிறது, நிவாரணங்களை நியாயப்படுத்துகிறது மற்றும் இனம், சாதி அல்லது சமூகத்தின் அடிப்படையில் கொலை தொடர்பான குற்றங்களுக்கான விதிகளை உள்ளடக்கியது, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை முதல் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை வரை ஆகியவற்றை உள்ளடக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மக்களவையில் மூன்று மசோதாக்களின் விவாதத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக இதுவரை 158 ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்றும் தனிப்பட்ட கவனம் செலுத்தி புதிய குற்றவியல் சட்டங்களில் உள்ள புள்ளி மற்றும் கமா ஆகிய அனைத்தையும் சரிபார்த்து உள்ளேன் என்றும் இந்தியாவின் தன்மை மற்றும் அரசியல் அமைப்பு மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.
Source : The Commune