உலகின் 3வது பெரிய பொருளாதாரம்: இலக்கை நிர்ணயித்து செயல்படும் மோடி அரசு!

By : Bharathi Latha
2029-ம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா உறுதியாகச் செல்வதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 11-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இன்று திப்ருகரில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர் பிரதமர் நரேந்திர மோடியின் 11 ஆண்டுகால ஆட்சி ஊழல் இல்லாத ஆட்சியாக வளர்ச்சியை ஏற்படுத்தியதாக அவர் கூறினார்.
கொள்கை முடக்கம், வாரிசு அரசியல் ஆகியவற்றில் இருந்து இந்தியா விடுபட்டுள்ளதாகவும், வளர்ச்சி, இளைஞர்களால் இயக்கப்படும் புதுமைகள், உள்கட்டமைப்பு மாற்றம் ஆகியவற்றால் நாடு இப்போது சக்தி பெறுவதாகவும் கூறினார். பத்து ஆண்டுகளில், 25 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் மக்கள்தொகையை விட அதிகம் என்று சர்பானந்தா சோனாவால் கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் பொருளாதார முன்னேற்றங்களை எடுத்துரைத்த அமைச்சர், நான்காவது பெரிய உலகப் பொருளாதாரமாக இந்தியா எழுச்சி பெற்றுள்ளதாகவும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்றும் கூறினார். 2029-ம் ஆண்டுக்குள், இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என அவர் தெரிவித்தார். ஒரு வளர்ந்த, தற்சார்பு பாரதத்திற்கான அடித்தளத்தை அரசு உருவாக்கி வருகிறது என அவர் கூறினார். வடகிழக்குப் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் தலைமையில் சிறந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
