ஸ்ரீரங்கம் கோவிலின் 300 ஏக்கர் நிலம் எங்கே? அமைச்சர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்!
By : Shiva
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான 306 ஏக்கர் நிலம் தற்போது ஆக்கிரமிப்பில் உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோவிலுக்கு சொந்தமான 330 ஏக்கர் நிலத்தில் 24 ஏக்கர் மட்டுமே கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது என்று அமைச்சர் தெரிவித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூலோக வைகுண்டம் என்று பெருமையுடன் அறியப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. கடந்த 1866 ஆம் ஆண்டு ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமாக 330 ஏக்கர் நிலங்கள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டது. ஆனால் இப்போது கோவிலை நிர்வகிக்கும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 24 ஏக்கர் நிலம் மட்டுமே இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
பிற இடங்கள் கடைகள் மற்றும் வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு கோவில் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளவர்கள் உரிய மனு அளிக்கும் பட்சத்தில் வாடகைதாரர்கள் ஆக ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றும் அப்படி இல்லாத பட்சத்தில் ஆக்கிரமிப்புகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் கோவிலில் ஆய்வு செய்த அமைச்சர், அங்குள்ள கோசாலையில் பசுக்களை பாதுகாப்புடன் சிறப்பாக பராமரிக்க அறிவுறுத்தியதாக கூறினார். மேலும் புதிதாக ஒரு கோசாலையை அருகே ஏற்படுத்தி பராமரிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கம் கோவில் கோசாலையில் உபரியாக உள்ள பசுக்களை வருமானம் இல்லாத சிறிய கோவில்களின் அர்ச்சகர்களுக்கு இலவசமாக வழங்குவதாக ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி தலைமையில் ஒரு நிகழ்வு நடைபெற்றது. இதுகுறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்தது. கோவிலுக்கு தேவையான பசும் பால் மற்றும் நெய் ஆகியவற்றை கோரி ஆண்டுதோறும் டெண்டர் விடுக்கப்படும் நிலையில் கோசாலையில் உள்ள பசுக்களிடம் இருந்து அவற்றை பெறாமல் உபரியாக இருப்பதாக கூறி பிறருக்கு வழங்குவது ஏன் என்று சர்ச்சை எழுந்தது.
மேலும் இலவசமாக வழங்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் உண்மையிலேயே தகுதியானவர்களை சென்றடைந்ததா அல்லது இறைச்சி விற்பனை கடைகளுக்கு சென்றதா என்று கேள்வியும் எழுப்பப்பட்டது. இந்நிலையில் தற்போது அமைச்சர் மற்றொரு கோசாலை அமைத்து பசுக்களைப் பராமரிக்க முடியுமா என்று ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.