Kathir News
Begin typing your search above and press return to search.

மே, ஜூன் மாதத்தில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்...தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

மே, ஜூன் மாதத்தில் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்க வேண்டும்...தமிழக அரசுக்கு வானதி சீனிவாசன் வலியுறுத்தல்..!

SushmithaBy : Sushmitha

  |  3 May 2024 1:30 PM GMT

கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும். மே, ஜூன் மாதங்களில் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் இந்த ஆண்டு மிக அதிகமாக இருக்கிறது. மேட்டூர் அணை உள்ளிட்ட அணைகள், வீராணம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. பல அணைகள், ஏரிகள் வறண்டு விட்டன.

இதனால், தமிழகத்தின் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில வாரங்களில் தமிழகம் மிகப் பெரிய குடிநீர் பஞ்சத்தை எதிர்கொள்ளும். தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெப்பநிலை 111 பாரன்ஹீட்டை தாண்டும் என்றும், கடும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் தண்ணீர் பந்தல்களை அமைத்து குடிநீர், மோர் வழங்கினாலும் அது அனைவருக்கும் போதுமானதாக, சுகாதாரமானதாக இருப்பதில்லை. எனவே, ஆவின் நிறுவனம் மூலம் கோடை வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை, ஒரு ரூபாய்க்கு மோர் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும்.

இப்போது நடுத்தர மக்களும் அதிகமாக ஏ.சி. பயன்படுத்துகின்றனர். 24 மணி நேரமும் மின்விசிறியை பயன்படுத்த வேண்டியுள்ளது. அதுவும் அதிகமான மின்விசிறிகளை பயன்படுத்த வேண்டி உள்ளது.இதனால் இந்தக் கோடை காலத்தில் வழக்கத்தை விட மூன்று நான்கு மடங்கு அதிகமாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர். எனவே. குறைந்தபட்ச மே, ஜூன் இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில், மாதந்தோறும் மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிப்போம் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை செயல்படுத்தவில்லை.

இந்த கோடை காலத்திற்கு மட்டுமாவது, ஒரு மாதத்திற்கு மின் பயன்பாட்டை கணக்கிட்டு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். இதன் மூலம் மின் கட்டண சுமையிலிருந்து மக்கள் ஓரளவுக்கு தப்பிக்க முடியும். தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற்று, கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க இது போன்ற நடவடிக்கைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News