அயோத்தி ராமர் கோவிலுக்கு பாதயாத்திரையில் வந்த 350 இஸ்லாமியர்! ராமர் நம் மூதாதையர்!
By : Sushmitha
உத்திரபிரதேசத்தில் அயோத்தியில் ராமர் பிறந்து ராஜ்ஜியம் அமைத்த இடத்தில் பிரம்மாண்டமாக கோவில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் 22 ஆம் தேதியில் கும்பாபிஷேக விழா நடந்து முடிந்தது. இதனை அடுத்து பால ராமரை தரிசனம் செய்வதற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமர் கோவிலில் குவிந்து வருகின்றனர். அதாவது மக்களின் தரிசனத்திற்கு ராமர் கோவில் திறந்து விடப்பட்ட 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்துள்ளதாகவும் இதுவரை காணிக்கையாக 11 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியானது.
இந்த நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து 350 இஸ்லாமியர் ராமர் கோவிலில் தரிசனம் மேற்கொள்வதற்கு பாதயாத்திரையில் வந்துள்ளனர். அதாவது ஆர். எஸ். எஸ். அமைப்பின் முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் என்ற பிரிவை சேர்ந்த 350 பேர் கடந்த மாதம் 25ஆம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் இருந்து அயோத்தி ராமர் கோவிலில் பாலராமரை தரிசிக்க பாத யாத்திரையில் புறப்பட்டுள்ளனர்.
வெறும் காலுடன் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பாதயாத்திரை மேற்கொண்ட இந்த குழுவினர் நேற்று முன்தினம் 150 கிலோமீட்டர் பயணம் மேற்கொண்டு அயோத்தி ராமர் கோவிலை அடைந்துள்ளனர். அதற்குப் பிறகு பகவான் ராமனை வணங்கியுள்ளனர். மேலும் பகவான் ராமர் நம் அனைவருக்கும் மூதாதையர் அதோடு ஜாதி மதம் போன்றவற்றை விட நம் நாடும் மனித நேயம் தான் முக்கியம்! எந்த மதமும் மற்றவர்களையும் விமர்சிக்கவும் ஏளனமாக பேசவும் இழிவாக பேசவும் கற்பிக்கவில்லை என முஸ்லிம் ராஷ்டிரிய மஞ்ச் அமைப்பில் ஒருங்கிணைப்பாளர் ராஜா ராய்ஸ் தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar