தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் மோடி அரசு: விரைவில் 4 படகுத்துறைகள்!

By : Bharathi Latha
தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்த 4 படகுத்துறைகள் அமைக்கப்படவுள்ளதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர் ஆர்.தர்மர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர், படகுப் போக்குவரத்து சுற்றுலாவை மேம்படுத்த பவானி ஆற்றில் பவானி-சங்கமேஸ்வர் ஆலயம் அருகேயும், காவேரி-கொள்ளிடம் ஆற்றில் சிதம்பரம் அருகேயும், பழையாறு ஆற்றில் கன்னியாகுமரி அருகேயும், பொன்னியாறு ஆற்றிலும் படகுத்துறைகள் அமைக்கப்படவிருப்பதாக கூறினார். இவற்றில் பழையாறு, பொன்னியாறு படகுத்துறைகள் சரக்குப் போக்குவரத்திற்கும் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
மகாபலிபுரத்திலிருந்து எடியூர் பாலம் வரையும், கூவம் ஆற்றில் மெரினா கடற்கரை அருகே பக்கிங்காம் கால்வாயிலும், பழவேற்காடு ஏரியிலும் படகுத்துறைகள் அமைக்கப்படவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். எண்ணூர் துறைமுகத்திலிருந்து எண்ணூர் அனல்மின் நிலையம் வரை சரக்குப் போக்குவரத்துக்கான படகுத்துறை அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
