சீனாவில் மீண்டும் கொரோனா : பாதிக்கப்பட்ட விமான நிலைய பெண், 460 விமானங்களும் ரத்து.!

By : Bharathi Latha
சீனாவில் முதல் முதலாக பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது நாடு முழுவதும் பல்வேறுவிதமான உருமாறி முழுமையாக தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த கொரோனாவால் உலகம் முழுவதும் தற்போது வரை பல கோடி பேர் பாதிப்படைந்து உள்ளனர். எனினும், சீனா பாதிப்புகளை பெருமளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதில் தற்போது, சீனாவில் விமான நிலைய பெண் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து 460 விமானங்களை ரத்து செய்து கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
தெற்கு சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என சுகாதார ஆணையம் தெரிவித்திருந்தது. அவர்களில் ஷென்ஜென் நகரில் 2 பேர், போஷன் மற்றும் டாங்குவான் நகரங்களில் தலா ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. மாகாண தலைநகர் குவாங்சவ் நகரில் மற்ற இருவருக்கு பாதிப்பு அறியப்பட்டு உள்ளது. இவர்களில் ஷென்ஜென் விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் 21 வயது பெண் ஊழியர் ஒருவருக்கு டெல்டா வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதனையடுத்து அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 110 பேரை தனிமைப்படுத்தி கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். பெண் ஊழியருக்கு கொரோனா எதிரொலியாக 460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, விமான நிலையத்தில் கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. கொரோனா பரவலை கட்டுப்படுத்த கோடிக்கணக்கான பரிசோதனைகள் நடந்துள்ளன. டாங்குவான் நகரில் 13 பகுதிகள் மூடப்பட்டு உள்ளன. போக்குவரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன என குவாங்சவ் சுகாதார ஆணைய துணை இயக்குனர் சென் பின் கூறியுள்ளார். ஏனென்றால் டெல்டா வைரஸ் மிகவும் வேகமாகப் பரவக்கூடியது. அதனால்தான் சீன அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
