Kathir News
Begin typing your search above and press return to search.

வேலியே பயிரை மேய்ந்தது : நகைக்கடையில் 5 லட்சம் திருடிய காவல்துறையினர்!

வேலியே பயிரை மேய்ந்தது : நகைக்கடையில் 5 லட்சம் திருடிய காவல்துறையினர்!

Mohan RajBy : Mohan Raj

  |  12 Jun 2021 1:45 AM GMT

சென்னை பூக்கடைப் பகுதியில் நகைக்கடையில் விசாரணை நடத்தச் சென்ற போலீஸ்காரர்கள், அங்கிருந்து ரூ.5 லட்சத்தைத் திருடிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனோ இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் நகைக்கடைகள் திறக்க அனுமதி இல்லை. சென்னை பூக்கடை என்.எஸ்.சி.போஸ் சாலையிலுள்ள நகைக்கடை திறந்திருப்பதாக பூக்கடை காவல் நிலையத்துக்குத் தகவல் வந்தது. உடனடியாக காவலர்கள் சர்ஜுன், முஜிப்ரகுமான் ஆகியோர் சம்பந்தப்பட்ட நகைக்கடைக்குச் சென்றனர்.

அங்கு நகைக்கடையின் கதவு பாதி திறந்த நிலையில் இருந்துள்ளது. அப்போது கடைக்குள் ஊழியர்கள் பணத்தை எண்ணிக்கொண்டிருந்தனர். அதைப் பார்த்த காவலர்கள், `ஊரடங்கு நேரத்தில் எப்படி நீங்கள் கடையைத் திறக்கலாம்?' எனக் கேள்வி கேட்டனர். அதற்குக் கடை ஊழியர்கள், `விற்பனை செய்யவில்லை, பணத்தை மட்டும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்' என்று பதிலளித்தனர். கடையை மூடும்படி காவலர்கள் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

பின்னர் காவலர்கள் சென்றவுடன் சிறுது நேரம் கழித்து பணத்தை எண்ணிப் பார்த்தபோது 5 லட்சம் ரூபாய் மாயமாகியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது காவலர்கள் இருவரும் மேஜையில் வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுக்களில் சிலவற்றைத் தங்களின் பேன்ட் பாக்கெட்களில் வைக்கும் காட்சி பதிவாகியிருந்தது. அதைப் பார்த்த உரிமையாளர், சி.சி.டி.வி பதிவுகளோடு போலீஸ் உயரதிகாரிகளைச் சந்தித்து விவரத்தைக் கூறினார்.

உடனே உயரதிகாரிகள், சம்பந்தப்பட்ட பூக்கடை காவல் நிலைய காவலர்கள் சர்ஜுன், முஜிப் ரகுமான் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். முதலில் பணத்தை எடுக்கவில்லை என அவர்கள் இருவரும் கூறினர். சி.சி.டி.வி காட்சிகளைக் காண்பித்த பிறகு பணத்தைத் திருடியதை அவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது.

Source - ஜூனியர் விகடன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News