வீடுகளுக்கே சென்று சேவை செய்யும் 5 வேன்கள்: தொடங்கி வைத்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன்!

பாதுகாப்புத்துறையின் ஸ்பர்ஷ் ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முகாமை மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் திருச்சியில் தொடங்கி வைத்தார். ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இம்முகாமில் திருச்சி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த 6000-க்கும் அதிகமான பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் எல் முருகன் இந்த முகாம் மூலம், பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஓய்வூதியம் தொடர்பான சேவைகளை வீட்டில் இருந்தபடியே எளிதாக பெற முடியும் என்று குறிப்பிட்டார்.
மத்திய அரசின் ஓய்வூதிய பட்ஜெட்டில் சுமார் 65 சதவீதம் பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என்று கூறினார். மத்திய அரசின் 56 லட்சம் ஒய்வூதியதாரர்களில் 57 சதவீதம் பேர் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று சேவை செய்யும் வகையிலான 5 வேன் சேவையை அமைச்சர் தொடங்கிவைத்தார். இவ்வாகனங்கள் மூலம் அதிகாரிகள் நாளை முதல் 10 நாட்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓய்வூதியம் தொடர்பான குறைகளுக்கு வீடுகளிலேயே தீர்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.