பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டம்: பெண்களுக்கான கட்டப்பட்ட 55,000 வீடுகள்!

By : Bharathi Latha
அசாம் மாநிலத்தில் கிராமப்புற வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான், குவஹாத்தியில் காணொலி வாயிலாக நடைபெற்ற பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள 55,000 வீடுகளுக்கான புதுமனைபுகும் விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், நடப்பு நிதியாண்டில் இத்திட்டத்தின் கீழ் கூடுதலாக, 3.76 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிவராஜ் சிங் சௌஹான் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய சிவராஜ் சிங் சௌஹான், கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், பின்தங்கிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார். பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 20 லட்சம் வீடுகள் கட்டி முடித்து குறிப்பிடத்தக்க சாதனையை அசாம் மாநிலம் படைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, புதிய வீடுகளை வெற்றிகரமாகக் கட்டி முடித்து புதிய வீடுகளுக்கு குடிபெயர்ந்த இத்திட்டப் பயனாளிகளுக்கு அமைச்சர் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையாக, வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், பெண்களுக்கு அத்தியாவசியத் திறன் மேம்பாட்டை வழங்கும் வகையில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் லக்கிமி மிஸ்திரி என்ற கட்டுமானப் பணிகளில் பெண்களின் திறன் மேம்பாட்டிற்கான திட்ட முயற்சியையும் சிவராஜ் சிங் சௌஹான் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தை நினைவுகூரும் வகையில், லக்கிமி மிஸ்திரி முன்முயற்சியின் கீழ் பயிற்சி பெறும் ஐந்து பெண்களுக்கு பாதுகாப்புச் சாதனங்கள் வழங்கப்பட்டன.
