திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!! பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக ஜன.6 முதல் போராட்டம்!!

By : G Pradeep
அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும், அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது, தொகுப்பூதியம், சிறப்பு கால முறை மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் அளிப்பது போன்ற பத்து வகையான கோரிக்கைகள் முன்வைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு சங்கமான ஜாக்டோ ஜியோ போராட்டம் நடத்தி வருகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்டம் சென்னை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிலையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அங்கு மு.பாஸ்கரன், சே.பிரபாகரன், இலா.தியோடர் பாஸ்கரன் போன்றோர் ஆலோசனை நடத்தினர்.
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பிரபாகரன், திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி வட்டார அளவில் பிரச்சாரங்கள் நடத்தவும், டிசம்பர் 13ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தார். மேலும் டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடக்கப் போவதாகவும், 2026 ஜனவரி 6ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
