ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் கூறியது என்ன!
By : Shiva
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று கேள்விக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தோற்று அதிகரித்துவரும் மாநிலங்களில் தமிழ்நாடு எட்டாவது இடத்தில் உள்ளது. இதனால் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது "ஏப்ரல் 6ஆம் தேதிக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பது தவறான செய்தி. தேவையற்ற பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். இதற்கு பொதுமக்கள் தங்களின் முழு ஆதரவை தர வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னையில் 100 பேருக்கு பரிசோதனை செய்தால் அதில் 8 பேருக்கு நோய் தொற்று உறுதியாகியுள்ளது. இதனை ஐந்து பேராக குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் அமைத்து பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் வாயிலாகவே வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு முழு ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.