Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு 6, 362 கோடி ஒதுக்கீடு!

தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக 6,362 கோடி மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாக மத்திய மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு 6, 362 கோடி ஒதுக்கீடு!
X

KarthigaBy : Karthiga

  |  21 Aug 2024 3:30 PM GMT

தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக மத்திய அரசு ரூபாய் 6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு குறைந்த அளவிலான நிதியை மத்திய அரசு ஒதுக்கி இருப்பதாகக் கூறி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

அதில் புதிய பாதைகளுக்கு இடைக்கால ஒதுக்கீடாக ரூபாய் 976.10 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போதைய பட்ஜெட்டில் வெறும் ரூபாய் 301.30 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது .இரட்டைப் பாதை திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூபாய் 275 கோடி நிதி குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கடிதத்தில் தெரிவித்து இருந்தார் .இதற்கு பதில் அளித்து சமூக வலைதளத்தில் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

பின்வரும் உண்மைகளை முதல்வர் மு.க ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ரூபாய் 6,362 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இது காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விட ஏழு மடங்கு அதிகம். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் படி நிலம் என்பது மாநில பொருளாகும். நிலம் கையகப்படுத்துவதில் உங்கள் அரசு எங்களுக்கு ஆதரவளித்தால் மட்டுமே திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். 2,749 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்ட நிலையில் இதுவரை 807 ஹெக்டேர் நிலம் மட்டுமே கையகப்படுத்தப்படுவதில் உங்கள் தலையீட்டை நாடுகிறோம். நீங்கள் ஓர் அடி எடுத்து வைத்தால் தமிழகத்தில் ரயில்வே மேம்பாட்டுக்கு நாங்கள் இரண்டடி எடுத்து வைப்போம் என்று உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News