விவசாயிகளுக்கு 6 ஆயிரம் வழங்கும் பிரதமரின் திட்டம்.. தமிழக பயனாளிகள் 46 லட்சமா..
By : Bharathi Latha
பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தில் தமிழ்நாட்டில் 46 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் பற்றி பொதுமக்களிடையே குறிப்பாக கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சபத யாத்திரை குறித்து சென்னையில் இன்று அமைச்சர் ஆய்வு செய்தார். வங்கிகள், பொதுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் உயர் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சிறு குறு வியாபாரிகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக எண்ணிக்கையிலான வியாபாரிகளுக்குக் கடன் வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார். ஜன்தன் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேர் வங்கிக் கணக்குகளைத் தொடங்கி இருப்பதாகவும், இதனால் மத்திய அரசின் சமூக நலத் திட்டங்களின் பணப்பயன் நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களைப் பயனாளிகளுக்குக் கொண்டு செல்லும்போது மத்திய அரசின் பங்களிப்பு அவற்றில் பிரதிபலிக்க வேண்டும் என்றும் கூட்டாட்சி முறை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும், அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஆயுஷ்மான் பாரத், உஜ்வாலா, ஜல் சக்தி இயக்கம், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதித் திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கான ஸ்வநிதி திட்டம், விபத்துக் காப்பீட்டுத் திட்டம், முத்ரா திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் உட்பட மத்திய அரசின் 14 திட்டங்கள் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த யாத்திரை நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார். ஏற்கனவே பயனடைந்து வருபவர்களின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் புதிய பயனாளிகள் கண்டறியப்பட்டு அவர்கள் பயனடைய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் டாக்டர் முருகன் கூறினார்.
Input & Image courtesy: News