Kathir News
Begin typing your search above and press return to search.

₹ 60,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள்- நீதிமன்ற உத்தரவால் மீட்க நடவடிக்கை!

₹ 60,000 கோடி மதிப்புள்ள கோவில் சொத்துக்கள்- நீதிமன்ற உத்தரவால் மீட்க நடவடிக்கை!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  15 May 2021 9:37 AM GMT

நீதிமன்றத்தின் தலையீட்டால் ₹60,000 கோடி மதிப்புள்ள 2,000 ஏக்கர் கோவில் நிலங்களை மீட்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கி உள்ளனர். அரசியல் கட்சியினர் உட்பட அதிகாரத்தில் உள்ள பலரின் துணையுடன் அபகரிக்கப்பட்டுள்ள இந்த கோவில் சொத்துக்களை மீட்க முதல் கட்டமாக தானம் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

திருப்போரூர் முருகன் கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தான் அறக்கட்டளை கோவிலுக்கு சொந்தமாக ₹.60,000 கோடி மதிப்பில் 2,000 ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்படுகின்றது. முக்கியமான இடங்களில் அமைந்துள்ள இந்த சொத்துகளை அபகரிக்க பலர் முயற்சி செய்துள்ளனர். இதில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் அடக்கம். திருப்போரூர் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ இதயசந்திரன் இப்படிப்பட்ட ஒரு‌ கோவில் நில ஆக்கிரமிப்பு பிரச்சினையில் துப்பாக்கிச் சூடு நடத்தி பின்னர் அவரது வீட்டில் சோதனையிடப்பட்ட போது பல துப்பாக்கி தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன்‌ பின்னர் கோவில் சொத்துக்களை மீட்க பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், திருப்போரூர் பகுதியில் உள்ள கோவில் நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து கோவில் நிலங்களுக்கான பத்திரப்பதிவை நிறுத்தி உத்தரவிடப்பட்டது.

அதன் பின்னர் இத்தகைய முறைகேடுகளை தடுத்து நிறுத்தி, கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளை வருவாய்த்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதல் கட்டமாக மாமல்லபுரம் ஆளவந்தான் கோவில் அறக்கட்டளைக்குச் சொந்தமான சொத்துகள் அளவீடு செய்யப்பட்டன.

திருப்போரூரைச் சுற்றியுள்ள கண்ணகப்பட்டு, வேம்படி விநாயகர் கோவில் தெரு, சந்து தெரு, சவுபாக்கியா நகர் தனியார் குடியிருப்பு அருகில் உள்ள இடங்கள், நெம்மேலி செல்லும் சாலை, மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருப்போரூர் கந்தசுவாமி கோவிலுக்கு சொந்தமான 512 ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளன.

இவற்றில் கட்டிடங்களாக 26 ஆயிரத்து 476 சதுர அடி நிலப்பரப்பை 34 பேர் பயன்படுத்தி வருவதும், வணிக வளாகங்களாக 82 ஆயிரத்து 496 சதுர அடி நிலப்பரப்பை 50 பேர் பயன்படுத்தி வருவதும், மனை வாடகை அளித்து 2.5 லட்சம் அடி நிலப்பரப்பை 160 பேர் பயன்படுத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக வருவாய்த்துறையினர், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ, திருப்போரூர் தாசில்தார், துணை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், சர்வேயர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News