கிராமங்களுக்கு அதிக கவனம் - 63.7 சதவீதம் பேருக்கு தடுப்பூசி!
By : Shiva
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கிராமங்களில் அதிகம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஆண்கள் மற்றும் பெண்கள் சமமின்மையில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், இந்தியாவில் கிராமப்புறங்களில் தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டு வருவதாகவும் நேற்று தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் 63.7 சதவிகிதம் கிராமப்புறங்களில் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். இதேபோல் 36 சதவிகிதம் நகர்ப்புறங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேபோல் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சரிசமமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் இதுவரை இந்தியாவில் 53 சதவீத ஆண்களுக்கும் 46 சதவிகித பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். பெண்கள் மத்தியில் தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக கிராமப்புறங்களில் அதிக அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும் கிராமப்புறங்களிலும் தடுப்பூசி அதிக அளவில் செலுத்துவது சாத்தியமான ஒன்றே என்று அவர் தெரிவித்தார். இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.