சென்னை துறைமுகத்தில் ரூ.67.21 கோடியில் திட்டங்கள்: தமிழகத்திற்கு தந்த மோடி அரசு!

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சென்னை துறைமுக ஆணையத்தில், கோர்டெலியா பயணக் கப்பலான எம்வி எம்பிரஸில், இரண்டாவது ஆசியான் – இந்தியா சொகுசு பயணக் கப்பல் உரையாடலை ஜூன் 30-ம் தேதி தொடங்கி வைத்தார். மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் குரூஸ் பாரத் இயக்க செயலகம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. இரண்டு நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் புருனே, கம்போடியா, இந்தோனேசியா, லாவோ, மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய 10 ஆசியான் உறுப்பு நாடுகளிலிருந்து 30-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும், இந்தியாவிலிருந்து 40க்கும் மேற்பட்ட மூத்த அரசு மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், ‘ஆசியான் அமைப்பு இந்தியாவின் கிழக்கு கொள்கையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது என்று கூறினார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, வளம், ஆகியவற்றை நிலைநிறுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பாக உள்ளது என்றும் அவர் கூறினார். இந்திய கப்பல் சுற்றுலா இயக்கத்தின் மூலம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கான இலக்குகளை எட்ட இந்த அமைப்பு உதவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர் சென்னை துறைமுகத்தில் 67.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4 திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கப்பல் பயண முனையத்தை 19.95 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் இதன் மூலம் இந்த முனையத்தில் பயணிகள் கையாளும் திறன் வரும் அக்டோபர் மாதத்திற்குள் 3000 பயணிகளாக இரட்டிப்பாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.