ஜல்ஜீவன் திட்டத்திற்கு மேற்கு வங்கத்திற்கு ₹7000 கோடி மத்திய அரசு நிதி!
By : Shiva
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு ₹7,000 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மேற்கு வங்கத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.
ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்காக ஜல்ஜீவன் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே கோவா, புதுச்சேரி போன்ற மாநிலங்கள் 100% குடிநீர் குழாய் இணைப்பை பெற்று விட்ட நிலையில் பல்வேறு மாநிலங்களில் இந்தத் திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேற்கு வங்காள அரசு இந்தத் திட்டத்திற்கு தங்களின் ஒத்துழைப்பை அளிக்காமல் பணியில் மெத்தனம் காட்டி வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம், மேற்கு வங்கத்துக்கு 2021-22ம் நிதியாண்டில் மத்திய அரசு ரூ.6,998.97 கோடி ஒதுக்கியது. இத்திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்துக்கு கடந்த 2019-20ம் ஆண்டில் ரூ.995.33 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.1,614.18 கோடியும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. தற்போது இந்த ஆண்டுமேற்கு வங்கத்துக்கு 4 மடங்கு அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜல்ஜீவன் திட்டம் கடந்த 2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது, மேற்கு வங்கத்தில் மொத்தம் இருந்த 163.25 லட்சம் கிராம வீடுகளில் 2.14 லட்சம் வீடுகளில் மட்டுமே குடிநீர் இணைப்பு இருந்தது. அதாவது கிராமங்களில் ஒரு சதவீத வீட்டில் மட்டுமே குடிநீர் குழாய் இணைப்பு இருந்தது. ஆனால் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் மேற்கு வங்கத்தில் கடந்த 21 மாதத்தில், 14 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கு வங்க அரசின் மெத்தன போக்கால் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இந்த இத்திட்டத்தின் மூலம் கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தற்போது மத்திய அரசு ₹7,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.