Kathir News
Begin typing your search above and press return to search.

காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர்: முதல்வருக்கு 9 கேள்விகளை முன்வைத்த பா.ஜ.க மாநில தலைவர்!

காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த இளைஞர்: முதல்வருக்கு 9 கேள்விகளை முன்வைத்த பா.ஜ.க மாநில தலைவர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 July 2025 8:03 PM IST

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் ஒன்பது கேள்விகளை முன் வைத்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் சமூக வலைதள பக்கங்களில் கூறும் போது, "பாஜகவின் மாநிலத் தலைவராக அல்ல, பாஜகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அல்ல, ஈன்றெடுத்த மகனை இழந்து வாடும் ஒரு தாயின் சார்பாக உங்களிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். காவல்துறையினரால் அடித்து கொலை செய்யப்பட்ட சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அஜித் குமாரின் மரணம் தொடர்பான கீழ்கண்ட கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் "காவல்துறை அமைச்சர்" திரு. ஸ்டாலின் அவர்களிடம் இருந்து பதில்களை பெற்று தாருங்கள்.


1. காவல்துறையால் கைது செய்யப்பட்ட அஜித்குமார் 24-மணி நேரத்திற்குள் நீதிபதிக்கு முன் ஏன் ஆஜர்படுத்தப்படவில்லை?

2. பல இடங்களில் அஜித்குமாரை வைத்து அடித்து துன்புறுத்திய காவல்துறை மடப்புரம் கோவில் அலுவலகத்தின் பின்புறம் அழைத்து சென்று அவரைத் தாக்கியதாக அஜித்குமாரின் சகோதரர் நவீன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு கோவிலில் இருந்து விசாரணை என்ற பெயரில் முறையாக கைது செய்யப்படாத ஒருவரை காவல்துறை அழைத்துச்செல்ல அனுமதி வழங்கியது யார்?

3. விரைந்து தனிப்படை அமைத்து அஜித்குமாரை விசாரிக்கும்படி விசாரித்து "உண்மையை" வரவழைக்க மாவட்ட SP திரு. ஆஷிஷ் ராவத் வாயிலாக, நகையை பறிகொடுத்தவர்களுக்கு நெருக்கமாக இருக்கும் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறதே. இது உண்மையா? உண்மை எனில், யார் அவர்? அவர் மீது என்ன நடவடிக்கை?

4. இரும்பு கம்பியால் சரமாரியாக அடிக்கப்பட்டு, மிளகாய் பொடி கலந்த தண்ணீரை குடிக்கச் செய்து துன்புறுத்தப்பட்ட அஜித்குமார் மயங்கி விழுந்த பின் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படாமல், நான்கு மணி நேரம் போலீஸ் டெம்போ வேனில் பூட்டிவைக்கப்பட்டது ஏன்?

5. எளிய பின்புலம் கொண்ட இந்த இளைஞன் உயிர் வாழ்ந்தால் என்ன, இறந்தால் என்ன என்ற ஏளனமான எண்ணமா? அல்லது, உயிர் பிரிந்து விட்டது என்று தெரிந்து, தடயங்களை அழிக்கவும், கட்டுக்கதைகளை புனையவும் காவல் துறையினருக்கு தேவைப்பட்ட அவகாசம் தான் அந்த 4-மணி நேரமா?

6. நான்கு மணி நேரம் தாமதமாக அழைத்து வந்த காரணத்தினாலும், சந்தேகத்திற்குரிய நிலையில் மரணம் நிகழ்ந்துள்ள காரணத்தினாலும், அஜித்குமாரை பரிசோதிக்க திருப்புவனம் அரசு மருத்துவமனையும், மானாமதுரை அரசு மருத்துவமனையும் மறுத்துவிட்டதால், மதுரை வரை சென்று ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமாரை சடலமாக காவல்துறையினர் பரிசோதனைக்கு ஒப்படைத்தார்கள் என்பது உண்மையா?

7. அஜித்குமாரின் இறப்புக்கு போலீஸ் துன்புறுத்தல் காரணம் இல்லையென்றால், 6 காவலர்கள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்? இது கொலை தான் என்று ஒப்புக்கொண்ட பின்னும், அஜித் குமாரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர்கள் மீது கொலை வழக்கை இப்பொழுது வரையில் ஏன் பதியவில்லை? ஏன் கைது செய்யவில்லை?

8. இவ்வளவு குளறுபடிகள் இருந்தும், போராட்டத்தில் இறங்கிய அஜித் குமாரின் குடும்பத்தாரிடம் சடலத்தை பெற்றுக்கொள்ளவும், பிரச்சனையை பெரிதாக்காமல் இருக்கவும் திமுகவினரை வைத்து பேச்சுவார்த்தை நடத்தியதோடு, அவர்கள் மசியாமல் இருந்த நிலையில், காவல் துறையின் பாதுகாப்புடன் திமுக கொடிப் பொருந்திய வாகனத்தில் அஜித் குமாரின் தம்பியான நவீனை மறுபடியும் எங்கேயோ அழைத்துச் செல்ல முயற்சித்தது எவ்வித அராஜக செயலாகும்? நீதியை தடுக்கும் பொருட்டு செயல்பட்ட @arivalayam அமைச்சர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் மீது எப்பொழுது வழக்கு பதிவு?

9. இதுவரை திமுக ஆட்சியில் 24-க்கும் மேற்பட்ட காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ள நிலையில் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது தான் முதல்வரின் வேலையா? தமிழகக் காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா? தொடர் காவல் மரணங்களுக்கு முதல்வர் கூறப் போகும் பதில் என்ன? இதற்கெல்லாம் முதல்வர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது எப்பொழுது? மக்கள் கேட்கிறார்கள்" என கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News