கொரோனா தடுப்பூசி மூலம் 95 % உயிர் இழப்பைத் தடுக்கலாம் - ICMR தகவல்!
By : Shiva
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) வெளியிட்டுள்ள ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தி கொண்டவர்களில் 82 சதவிகிதத்தினர் உயிர் இழப்புகளில் இருந்து தங்களை பாதுகாத்து உள்ளவர்கள் என்றும் இரண்டாவது டோஸ் செலுத்தி கொண்டவர்களில் 95 சதவிகிதத்தினர் கொரோனா உயிரிழப்பில் இருந்து தங்களை பாதுகாத்துள்ளனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் இணைந்து, ‛தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே இறப்புகளைத் தடுப்பதில் கோவிட் தடுப்பூசியின் செயல்திறன்' என்ற தலைப்பில் ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வு தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களிடையே மேற்கொள்ளப்பட்டது. தமிழக காவல்துறையில் பணியாற்றும் 1,17,524 காவல்துறையினரில் 32,792 போலீசார் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 67,673 காவல்துறையினர் 2வது டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி உள்ளனர். மேலும் உள்ள 17,059 பேர் எந்த தடுப்பூசியையும் போட்டுக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இவர்களில் ஏப்ரல் 13, 2021 முதல் 2021 மே 14ஆம் தேதி வரை 31 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இறந்த 31 பேரில், நான்கு பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். 7 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் மீதமுள்ள 20 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் என தெரியவந்துள்ளது. இந்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ளது. 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்களில் 95 சதவிகிதத்தினர் தங்களை கொரொனா இறப்பிலிருந்து இருந்து பாதுகாத்துக் கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.