பூஸ்டர் தடுப்பூசி வேண்டாம், மக்கள் கவனமுடன் இருந்தால் போதும்: ICMR அறிவுரை!
வரவிருக்கும் பண்டிகை காலங்களில் மக்கள் கவனமுடன் இருந்தால் மட்டும்தான் தொற்று பரவலைத் தடுக்க முடியும் - ICMR.
By : Bharathi Latha
இந்தியாவில் தற்பொழுது இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் அடுத்த மாதத்தில் மூன்றாம் அலை தொடங்கலாம் என்றும் மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இத்தகைய ஒரு சூழ்நிலையில் அடுத்த மாதங்களில் பண்டிகை மாதங்கள் என்பதால் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவேதான் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மேலும் மத்திய அரசை தொடர்ந்து தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) இயக்குனர் ஜெனரல் பல்ராம் பார்கவா இது பற்றிக் கூறியுள்ளார். அவர் இதுபற்றி கூறுகையில், "ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் திடீரென கூடுவது, தொற்று பரவலை எளிதாக்கும். அடுத்து வரும் மாதங்களில் பண்டிகை காலம் துவங்க உள்ளதால் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்கும். இதனால், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான தடுப்பூசி போட்டுக் கொள்வது, தொற்று தடுப்பு விதிமுறைகளை பின்பற்றுவது ஆகிய நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும். தற்போதைய சூழலில் தடுப்பூசி பூஸ்டர் தேவை இல்லை மக்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டும் போதுமானது" என்று அவர் கூறினார். இந்தியாவில் குறிப்பாக மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா ஆகிய மாநிலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. இது குறித்து, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் N.K அரோரா இதுபற்றி கூறுகையில், "மக்கள் கையில்தான் முழு தொற்றைத் தடுக்கும் ஆயுதம் உள்ளது எனவே அவர்களால் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
Input & Image courtesy:Times of india