மதுரையைச் சேர்ந்த மூன்று மாவோயிஸ்டுகள் மீது சார்ஜ்ஷீட் - N.I.A அதிரடி!
By : Shiva
மதுரையைச் சேர்ந்த மூன்று இந்திய கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) செயற்பாட்டாளர்கள் மீது தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) கடந்த வெள்ளிக்கிழமை சென்னை பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை(NIA) சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் விவேகானந்தன் என்கிற விவேக் மற்றும் மூவேந்தர் நகரைச் சேர்ந்த சுரேஷ் ராஜன் மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
சுதந்திர தினம் கொண்டாடுவதை அவதூறாக பேசும் வகையில் விவேக் என்பவரின் பேஸ்புக் கணக்கில் இருந்து சர்ச்சைக்குரிய பதிவு ஒன்று பதிவு செய்யப்பட்டதாக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் மார்ச் 14-ஆம் தேதி இந்த வழக்கைக் கையில் எடுத்துக் கொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள பதிவுகளை ஆய்வு செய்தபோது அவர்கள் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான மாவோயிஸ்டின் சித்தாந்தத்தை பரப்பும் விதமாக செயல்களில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவை அனைத்தும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தெரிந்தே செய்துள்ளனர் என்றும் தேசிய புலனாய்வு அமைப்பின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் அவர்கள் மாவோயிஸ்டு சித்தாந்தத்துக்கு ஆதரவாக துண்டுபிரசுரங்கள், பதாகைகள் போன்றவை மூலம் மாவோயிஸ்டுகளை ஆதரித்தும் சமூகத்தில் தீவிரவாத சித்தாந்தத்தை பரப்பி வந்தது தெரியவந்துள்ளது. இவர்கள் மூன்று பேர் மீதும் தற்போது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.