சலுகைகள் அறிவித்த RBI.. பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த சைமா தொழில் அமைப்பு!!

By : G Pradeep
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியாவின் இறக்குமதி பொருள்களுக்கு 50% வரி விதிக்க உத்தரவிட்ட நிலையில் இந்தியாவின் ஜவுளி தொழில் ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளனர். 50% வரி விதித்து மூன்று மாத காலமான நிலையில் பல நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஜவுளி தொழிலாளர்கள் இதனை எதிர்கொள்வதற்கு சலுகைகள் அளிக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்தனர். இதைத்தொடர்ந்து ரிசர்வ் வங்கி சலுகைகளை அறிவித்துள்ளது.
இது தற்பொழுது தொழில்துறையினர் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தென்னிந்திய மில்கள் சங்கத் தலைவரான துரை பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ரூ. 1 லட்சம் கோடி வரை அமெரிக்காவிற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்து வந்த நிலையில் திடீரென்று 50% அமெரிக்கா வரி விதித்தது.
இதனால் பல உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பாதிப்பு அடைந்தனர். மேலும் உற்பத்தி நிறுத்தம், வேலை இழப்பு போன்ற நிலை ஏற்பட்டதால் கடன் மற்றும் வட்டி செலுத்த முடியாமல் தொழில்துறையினர் நிதி நெருக்கடியில் இருந்து வந்தனர். தொடர்ந்து 30 சதவீதம் கூடுதல் கடன் வழங்கவும், கடனை செலுத்துவதற்கு ஓராண்டு கால அவகாசம் மற்றும் ஏற்றுமதி சலுகைகள் அளிக்க வேண்டும் என்று ஜவுளி துறையினர் வேண்டுகோள் முன் வைத்தனர்.
இதைத்தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டியை கால அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. அதனால் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், நிர்மலா சீதாராமன், கிரிராஜ் சிங் போன்றோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
