உலக அளவில் ஆட்டத்தை ஆரம்பிக்க உள்ள டெல்டா வகை கொரோனா : WHO எச்சரிக்கை!

By : Bharathi Latha
2019 ஆம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, உலக நாடுகளை பெருமளவில் உலுக்கிவிட்டது. குறிப்பாக, அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் தன்னுடைய கொடிய முகத்தை காண்பித்தது. இந்த நோய் தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரையில் 18,29 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16.75 கோடி பேர் குணமடைந்து விட்டனர். 39.62 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இனி வரும் மாதங்களில் உலக நாடுகளில் டெல்டா வகை கொரோனாவின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் என்று தற்பொழுது உலக சுகாதார அமைப்பு(WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது உள்ள கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்குள், இந்த தொற்று உருமாறிய நிலையில் வேகமாக பரவி வருகிறது. இதனை டெல்டா வகை கொரோனா எனக் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது, இந்த டெல்டா வகை கொரோனா 96 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த வாரத்தை விட 11 நாடுகள் அதிகமானது என்று உலக சுகாதார அமைப்பு(WHO) தெரிவித்துள்ளது.
மேலும் உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி, ஆல்பா மாறுபாட்டின் பாதிப்புகள் 172 நாடுகளிலும், 120 நாடுகளில் பீட்டா வகை பாதிப்பும், 72 நாடுகளில் காமா வகை பாதிப்பும் மற்றும் 96 நாடுகளில் டெல்டா தற்போது புதிதாக பாதிக்கப்பட்ட 11 நாடுகளின் பட்டியலில் சேர்த்து புதிய கொரோனா வகை பாதிப்புகளும் கண்டறியப் பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் டெல்டா கொரோனா தொற்றின் ஆதிக்கம் உச்சமடையும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
