Kathir News
Begin typing your search above and press return to search.

ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம் ஆரோக்கியமான பூமிக்காகத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்.!

ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம் ஆரோக்கியமான பூமிக்காகத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்.!

ஆகஸ்ட் 1-7 : உலகத் தாய்ப்பால் வாரம் ஆரோக்கியமான பூமிக்காகத் தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம்.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2020 11:54 AM GMT

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைக்கும் நல்லது. தாய்ப்பால் ஊட்டுவதால் பூமி எப்படி ஆரோக்கியமாக இருக்கும்? ஆனால் இந்த ஆண்டின் உலகத் தாய்ப்பால் வாரத்தின் மையக்கருத்தே ஆரோக்கியமான பூமிக்காக தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்போம் என்பதுதான்.

இதைப் பிறகு விரிவாகப் பார்ப்போம். முதலில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் எப்படி இருக்கிறது என்பதைப் புள்ளிவரங்கள் மூலம் புரிந்து கொள்ளுவோம்.

ஒரு சமூகத்தில் தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் எந்த அளவில் உள்ளது என்பதை சுகாதார நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும் மூன்று காரணிகள் அடைப்படையில் கணிக்கின்றனர்.

1. குழந்தை பிறந்த உடனேயே ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்ட ஆரம்பித்தல்

2. குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்கு வெறும் தாய்ப்பாலை மட்டுமே உணவாகக் கொடுத்தல்

3. 6 மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவும் கொடுத்தல்

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு-4 (2015-16)-இல் இந்தக் காரணிகளின் அடிப்படையிலான புள்ளிவிவரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் மாவட்ட அளவில்வரை கிடைக்கின்றன.

இந்த கணக்கெடுப்பின்படி இந்தியாவில் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் 41.5% ஆகவும் 6 மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்கும் பழக்கம் 55% ஆகவும் 6 மாதத்துக்குப் பிறகு தாய்ப்பாலுடன் இணை உணவு கொடுத்தல் 42.2% ஆகவும் இருக்கின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்து இவை முறையே 55.4%, 48.3% மற்றும் 67.5% ஆகவும் இருக்கின்றன. புதுச்சேரியைப் பொறுத்து இவை 64.6%, 47.6% மற்றும் 76.6% ஆக உள்ளன.

பலவிதமான விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நேரிடைச் சந்திப்பு உரையால்டல்களும் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளும் சரியாகக் கடைபிடிக்கப்படவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

கிராம அளவில் அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் கிராமச் செவிலியரின் நேரடி இடையீடுகளும் குறிப்பிடத்தக்க பலன்களைத் தரவில்லை.

ஆனால் புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் தாய்ப்பாலூட்டுவதில் நிறைய இடைவெளி இருப்பது புலனாகும்.

இந்த இடைவெளியில்தான் தாய்ப்பாலுக்கு மாற்றாக செயற்கைப் பால்பொருட்கள் இடம்பிடித்துள்ளன. குழந்தைளுக்கான பால்பொருட்கள் விற்பனையானது சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கின்றது.

தாய்ப்பாலுக்கு மாற்றாக குழந்தைகளுக்கான செயற்கைப் பால்பொருட்கள் விற்பனை உலக அளவில் 2018 ஆம் ஆண்டில் 61.2 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது 2025 ஆம் ஆண்டில் இருமடங்காக அதாவது 119 மில்லியன் அமெரிக்க டாலராக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் இதன் விற்பனை 2016 இல் 26,900 டன் ஆகும். இது அடுத்த ஆண்டு (2021) 30,700 டன்னாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இங்குதான் பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்கத் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம் என்ற இந்த ஆண்டின் மையக் கருத்து வருகின்றது. தாய்ப்பாலுக்காக இந்தப் பூமியின் அரிதான மூல வளங்களோ அல்லது புதுப்பிக்க முடியாத எரிபொருள் மூலங்களோ செலவழிக்கப்படுவதில்லை. தாய்ப்பால் சுற்றுச்சூழலுக்கு உகந்தது மற்றும் பாதுகாப்பானது.

இதில் மாசுறுதலோ, கழிவுப்பொருட்களோ உருவாவதில்லை. எனவே தாய்ப்பாலானது தாய், குழந்தை ஆகிய இருவரோடு நாம் வாழும் இந்த பூமிக்கும் நற்பலன்களைத் தருகிறது. தாய்ப்பாலுக்கு மாற்றான செயற்கைப் பால்பொருட்கள் அதிநவீன பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன.

தயாரிப்பு, விநியோகம், விளம்பரம், பயன்பாடு ஆகிய அனைத்து நடவடிக்கைகளிலும் இந்த செயற்கைப் பால்பொருட்கள் சுற்றுச்சூழலைச் சீர்கெடுக்கின்றன. குறிப்பிடத்தக்க அளவிலான பசுமை இல்ல வாயுக்களை இவை வெளியிட்டு இயற்கையை சீரழிக்கின்றன.

2016ல் இத்தகைய செயற்கை பால் பொருட்களின் உற்பத்தியானது 1,07,490 டன் கரியமிலவாயுவுக்கு நிகரான பசுமை இல்ல வாயுக்களை வெளியிட்டு உள்ளது. பாட்டில்கள், உறிஞ்சும் ரப்பர், தகர டின்கள், விளம்பரப் பொருட்கள் என எண்ணற்ற கழிவுப்பொருட்களையும் இவை உருவாக்குகின்றன.

இந்தச் செயற்கைப் பால்பொருட்களை கைவிட்டு தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை பரவலாக்கும் போது அது பூமிக்கு எண்ணற்ற பலன்களைத் தரும்.

கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலத்தில் தாய்ப்பால் கொடுப்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. தாய்ப்பால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது என்று உலக சுகாதார நிறுவனமும் மருத்துவ நிபுணர்களும் உறுதிபடத் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா தொற்று உள்ள தாய் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தனது குழந்தைக்குத் தாய்ப்பால் தரலாம். அதேபோன்று கொரோனா தொற்றுள்ள குழந்தைக்கும் கொடுக்கலாம். இந்த கோவிட்-19 நெருக்கடி காலத்தில் எந்தக் காரணத்தை முன்னிட்டும் தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்திவிடக் கூடாது.

தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை. தாய்ப்பால் கொடுப்பது தாயின் கடமை. மகளிரின் உரிமைகள் மதிக்கப்படும் சமூகத்தில் பெண்களின் இனப்பெருக்க மண்டலம் சார்ந்த உரிமைகளும் பாதுக்கப்படும்.

பெணகளின் கல்வியறிவு மற்றும் உரிமைகளை நிலை நாட்டுவதன் மூலமே பெண்கள் சார்ந்த நாலன்களை உறுதிப்படுத்த முடியும். அதேபோல பெண்களுக்கு எதிரான பிரச்சனைகள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க முடியும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News