தேசிய மருத்துவர் தினம் ஏன் ஜூலை 1ல் கொண்டாடப்படுகிறது? #NationalDoctorsDay
தேசிய மருத்துவர் தினம் ஏன் ஜூலை 1ல் கொண்டாடப்படுகிறது? #NationalDoctorsDay

இதற்கு முன்னர் மருத்துவர்களின் முக்கியத்துவத்தை நாம் அடையாளம் கண்டிருக்கவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் அவர்கள் சமூகத்திற்கு எவ்வளவு பங்களிப்பு செய்கிறார்கள் என்பதை நாம் நிச்சயமாகக் கற்றுக் கொண்டிருக்கிறோம். நாம் சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும்போது, கொடிய வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் உயிருக்காகத் தொடர்ந்து போராடுவது மருத்துவர்கள்தான். நோய்த்தொற்றுடையவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில், என்னன்னவோ நோய்களில் இருந்து நாம் சிகிச்சை பெற்று, குணமடைய போராடும் மருத்துவர்களைப் பாராட்டுவதும், அங்கீகரிப்பதும் முக்கியமான செயலாகும். டாக்டர்கள் உண்மையிலேயே மிகப் பெரிய ஹீரோக்கள் தான். நிகழ்காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும்.
இந்தியா, தேசிய மருத்துவர் தினத்தை இன்று (ஜூலை 1) கொண்டாடுகிறது. சிறந்த மருத்துவரும், மேற்கு வங்கத்தின் இரண்டாவது முதல்வருமான டாக்டர் பிதன் சந்திர ராயின் பிறப்பு மற்றும் இறப்பு தினத்தை முன்னிட்டு இது கொண்டாடப்படுகிறது. அப்போதிருந்து இந்தியா மருத்துவத் துறையில் பல உயரங்களைத் தொட்டுள்ளது. டாக்டர் பி.சி. ராயின் மருத்துவப் பங்களிப்பை புதிய மற்றும் புதுமையான நுட்பங்களுடன் விரிவுபடுத்தியுள்ளோம். அவரை நினைவுகூறுவதன் மூலம் தன்னலமற்ற முறையில் நோயாளிகளின் ஆரோக்கியத்திற்காக அயராது உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க இந்த நாள் உதவுகிறது.
பாட்னாவில் ஜூலை 1, 1882 இல் பிறந்த ராய், சமூக-மத இயக்கமான பிரம்ம சமாஜின் நெருங்கிய ஆதரவாளர்களான பெற்றோருடன் வளர்ந்தார்.
மருத்துவத்தில் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அவர் இங்கிலாந்து சென்று அங்கு லண்டனில் உள்ள புகழ்பெற்ற செயின்ட் பார்தலோமிவ் மருத்துவமனையில் சேர்ந்தார். மருத்துவமனையின் டீன் அவரை (அல்லது எந்த ஆசியரையும்) இந்த நிறுவனத்தில் சேர்க்க தயங்கினாலும், ஒன்றரை மாத தொடர்ச்சியான விடாமுயற்சி மற்றும் 30க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்குப் பிறகு டீன் மனம் மாறி அவரை சேர்த்துக் கொண்டார்.
1911 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டம் பெற்றதைத் தொடர்ந்து, டாக்டர் ராய் ராயல் காலேஜ் ஆப் பிஜிசியன்ஸ் (MRCP) உறுப்பினராகவும், ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்களின் (FRCS) ஃபெலோவாகவும் ஆனார் - இது ஒரு மிகப் பெரிய சாதனை.
இதற்கிடையில், கல்கத்தா மேயர் (1931-33), கல்கத்தா பல்கலைக்கழக துணைவேந்தர் (1942-1944), இந்திய மருத்துவ கவுன்சிலின் தலைவர் (1939) மற்றும் ஆளுநராக உள்ளூர் நிர்வாகத்திலும் மிகவும் தீவிரமாக இருந்தார். ஐக்கிய மாகாணங்கள் (இப்போது உத்தரபிரதேசம்) அவரது மேயர் பதவியின் கீழ் தான் நகரம் இலவச கல்வி, பொது சுகாதாரம், சாலை உள்கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட விளக்குகள் மற்றும் நீர் வழங்கல் ஆகியவற்றில் பெரிய விரிவாக்கத்தை மேற்கொண்டது.
சுதந்திரத்தைத் தொடர்ந்து, டாக்டர் ராய் தனது தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த விரும்பினார், ஆனால் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், அவர் மேற்கு வங்க முதலமைச்சர் பதவியை 23 ஜனவரி 1948 அன்று ஏற்றுக்கொண்டார். பிளவுபட்ட வங்காளம், வகுப்புவாத வன்முறை மற்றும் அகதிகளின் வருகையால் சின்னாபின்னமாகி இருந்தது.
அவரது ஆட்சியின் கீழ், மேற்கு வங்கம் இறுதியாக மூன்று ஆண்டுகளுக்குள் அமைதியைக் கண்டது. மாநில முதல்வராக 14 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில், அவர் தனது மருத்துவ பயிற்சிக்காகவும் நேரம் ஒதுக்கி நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்தார்.அவர் ஜூலை 1, 1962 இல் காலமானார், அவர் ஒரு மருத்துவர் மற்றும் நிர்வாகியாக மிகச் சிறந்த பாரம்பரியத்தை விட்டு சென்றார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ஜூலை 1 ஆம் தேதி மருத்துவர் தினம் கொண்டாடப்படுவது 1991ல் ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவர் தினம் உலகம் முழுவதும் வெவ்வேறு தேதிகளில் அனுசரிக்கப்படுகிறது. அமெரிக்காவில், மார்ச் 30 ம் தேதி, கியூபாவில் டிசம்பர் 3 மற்றும் ஈரானில் ஆகஸ்ட் 23 அன்று அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவர் தினம் ஒரு கருப்பொருளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு, "மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு எதிரான வன்முறைகளுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை"ஆக இருந்தது.
இந்த ஆண்டு மருத்துவர்கள் தினத்தின் கருப்பொருள் "COVID 19ன் இறப்பைக் குறைத்தல்". அறிகுறியற்ற ஹைபோக்ஸியா மற்றும் ஆரம்பகால தீவிர சிகிச்சை பற்றிய விழிப்புணர்வு இதில் அடங்கும். கொரோனா வைரஸ் பரவலாக இருப்பதால், தேசிய மருத்துவர் தின கொண்டாட்டத்தில் நேருக்கு நேர் கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் இடம்பெறாது.