மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணி.! #covid19 #MLA
மகனுக்கும் தொற்று உறுதி ஆனது: தமிழகத்தில் பாதிக்கப்பட்ட 10-வது எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணி.! #covid19 #MLA

மின்துறை அமைச்சர் தங்கமணிக்கும், அவரது மகனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் சென்னையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெருந்தொற்று நோயான கொரோனா அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது. ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்தார். அந்த கட்சியைச் சேர்ந்தஎம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), ஆர்.டி. அரசு (செய்யூர்), செஞ்சி மஸ்தான் (செஞ்சி) ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான பழனி (ஸ்ரீபெரும்புதூர்), குமரகுரு (உளுந்தூர்பேட்டை), சதன் பிரபாகர் (பரமக்குடி), அம்மன் கே.அர்ஜூனன் (கோவை தெற்கு) ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, கடந்த மாதம் 30-ந் தேதி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது மின்துறை அமைச்சர் பி.தங்கமணிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரது மகன் தரணிதரனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரும், சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அமைச்சர் பி.தங்கமணிக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் தெரியவில்லை. அவராகவே கடந்த 3 மாதங்களாக அவ்வப்போது, கொரோனா பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி வந்தார். நேற்று முன்தினமும் தனது ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பினார்.
இந்த பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளிவந்த நேரத்தில்தான், கொரோனா பாதிப்பு அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அமைச்சர் பி.தங்கமணியையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 10 ஆகவும், அமைச்சர்களின் எண்ணிக்கை 2 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.