சென்னை எண்ணூர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவால் 10 கிராம மக்கள் அவதி- தற்காலிகமாக மூடப்பட்ட தொழிற்சாலை!
சென்னை எண்ணூர் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு மூச்சு திணறல் மற்றும் கண் எரிச்சலால் மக்கள் அவதி அடைந்தனர்.
By : Karthiga
சென்னை எண்ணூர் விரைவு சாலையில் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான உரத் தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா கர்நாடக மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இங்கு உரம் தயாரிக்க தொழிற்சாலையில் இருந்து கடலுக்கு அடியில் 2 கிலோமீட்டர் முதல் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை குழாய்கள் பதிக்கப்பட்டு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கப்பலில் கொண்டுவரப்படும் திரவ அம்மோனியா குழாய்கள் மூலம் தொழிற்சாலையில் உள்ள சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்படுகிறது.
இந்த சேமிப்பு கிடங்கு சுமார் 15,000 டன் அளவு கொண்டது என கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் திடீரென்று இந்த குழாய் உடைந்து அதிலிருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இந்த வாயு காற்றில் வேகமாக பரவி அதே பகுதியில் உள்ள சின்ன குப்பம் , பெரியகுப்பம் நேதாஜி நகர், பர்மா நகர், சுனாமி குடியிருப்பு போன்ற பகுதிகளில் பரவியது .இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் , கண் எரிச்சல் ,நெஞ்செரிச்சல் , வாந்தி மயக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டது. இதனால் மொத்தம் 42 பேர் பாதிக்கப்பட்டனர்.
அவர்களில் தேசராணி, சந்தானம் உட்பட 36 பேர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் குமாரி, ஆரோக்யராஜ் , ரீனா ஜான்சன், பிரவீனா, வேலு ஆகிய ஆறு பேர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வீடுகளில் இருந்து குழந்தைகளை தூக்கிக்கொண்டு பொருட்களை அப்படியே போட்டுவிட்டு உயிர் பிழைக்க வெளியேறினர் . மேலும் அவர்கள் முகத்தில் ஈரத் துணியை கட்டிக் கொண்ட நடுநோட்டுக்கு வந்தனர்.
அவர்கள் அருகில் உள்ள சமுதாய நலக்கூடம் ,தேவாலயங்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஊரே காலியானது. பெரும்பாலான மக்கள் தங்களுடைய உறவினர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு இரவு முழுவதும் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் உரத்தொழிற்சாலையின் மூன்று வாயில்கள் உட்பட 10 இடங்களில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் எண்ணூர் விரைவு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், போலீஸ் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால் தொழிற்சாலையை மூடும் வரை சாலை மறியலை கைவிட மாட்டோம் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.பாதிக்கப்பட்ட பெரிய குப்பம், சின்ன குப்பம் ,எர்ணாவூர் குப்பம் மீனவ மக்கள் போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வு முடிவுகள் அடிப்படையில் ஆலையை தற்காலிகமாக மூடி அதற்கான காரணங்கள் குறித்த நோட்டீஸ் சாலையின் நுழைவு வாயிலில் ஒட்டப்பட்டுள்ளது.