100 ஆண்டு பழமையான கோவில் இடிப்பு-பொதுமக்கள் சாலை மறியல்!
By : Shiva
கோவை முத்தண்ணன் குளக்கரையில் முத்துமாரியம்மன் கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால் அங்கு சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலை இடிக்க உள்ளதாக கடந்த ஆண்டு தெரிவிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கோவிலை இடிக்க கூடாது என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது அந்த முத்துமாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
இது குறித்து இந்து முன்னணி அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில் "குளக்கரையில் 100 ஆண்டு பழமையான அங்காளம்மன் கோவிலை இடித்து தள்ளிய கோவை மாநகராட்சியின் இந்து விரோத போக்கை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினரைகைது செய்த காவல்துறையினர் நடு ரோட்டில் உள்ள தர்கா மற்றும் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள ஜெபங்கூடங்களை அகற்ற முடியுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.
100 ஆண்டுகள் பழமையான முத்துமாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டு உள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.