100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை இடிக்க முடிவு- இந்துக்கள் எதிர்ப்பு!
By : Shiva
நாகர்கோவில் இரணியல் பாலம் அருகே உள்ள செல்வராஜ கணபதி விநாயகர் கோவிலை இடிக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை முடிவுக்கு அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தும் அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் இரணியல் வள்ளியாறு செல்வராஜ கணபதி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 100 வருடங்களாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த கோவில் நீர்நிலையில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ளதாக கூறி பொதுப்பணித்துறையினர் கோவிலை இடிப்பதற்காக கடந்த மாதம் 30ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறையினர் அளித்த காலக்கெடு முடிவடைந்து விட்டதால் தற்போது கோவிலை இடிப்பதற்கு பொதுப்பணித் துறையினர் ஏற்பாடு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து பத்மநாபபுரம் சப் கலெக்டர் மற்றும் தாசில்தார் உள்ளிட்டோரும் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது நீர் நிலைக்கோ பொது மக்களுக்கோ எந்த பாதிப்பும் இல்லாமல் கோவில் அமைந்துள்ளதாகவும் பல வருடங்களாக தாங்கள் இங்குள்ள கோவிலில் வழிபாடு செய்து வருவதாகவும் இதனால் இந்த கோவிலை இடிப்பதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில் பொதுப்பணித்துறையின் முடிவை கண்டித்து கோவிலின் முன் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக மாறி வருவதாக கூறினார். இதனால் அனைத்து முக்கிய பொறுப்புகளும் கிறிஸ்தவர்கள் வசம் இருப்பதாகவும் இதன் விளைவாக கன்னியாகுமரியில் உள்ள இந்துக்கள் ஒடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
இரணியல் வள்ளியாற்றின் கரையிலுள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வராஜ கணபதி திருக்கோவில் இடிப்பு விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு முடித்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மாவட்ட நிர்வாகம் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காவிட்டால் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும் திமுக ஆட்சிக்கு வந்த 200 நாட்களுக்குள் வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் பல்வேறு கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்ததோடு இவ்வாறு இடிக்கப்பட்ட வழிபாட்டு தலங்களில் ஒரு கிறிஸ்தவ தேவாலயமோ மசூதியோ கூட இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
Source : Dinakaran