Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூர் : கொரோனா ஊரடங்கால் நாற்றங்கால் தொழில் பாதிப்பு, ஒரு கோடி கன்றுகள் தேக்கம், 1000 தினக்கூலித்தொழிலாளிகள் வேலை இழப்பு.!

கடலூர் : கொரோனா ஊரடங்கால் நாற்றங்கால் தொழில் பாதிப்பு, ஒரு கோடி கன்றுகள் தேக்கம், 1000 தினக்கூலித்தொழிலாளிகள் வேலை இழப்பு.!

கடலூர் : கொரோனா ஊரடங்கால் நாற்றங்கால் தொழில் பாதிப்பு, ஒரு கோடி கன்றுகள் தேக்கம், 1000 தினக்கூலித்தொழிலாளிகள் வேலை இழப்பு.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 May 2020 8:30 AM IST

கடலூர் மாவட்டம் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி வட்டங்களை சேர்ந்த வேகாகொல்லை, சத்திரம், கோரணப்பட்டு, மதனகோபாலபுரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நாற்று உற்பத்தி பண்ணைகள் இந்திய அளவில் புகழ்பெற்றவை.

இரு நூற்றாண்டுகளுக்கு மேல் நாற்று உற்பத்தி தொழில் இங்கு நடந்து வருகிறது இங்குள்ள நாற்றங்கால்களில் உற்பத்தி செய்யப்படும் பூஞ்செடிகள்,பழமர நாற்றுகள், மரக்கன்றுகள் இந்தியா முழுவதும் பூத்து காய்த்து கனிந்து மக்களை மகிழ்வித்து வருகின்றன.

இதற்கு காரணம் இக்கிராமங்களின் செம்மண் வளமும், தண்ணீரின் தன்மையும் என்கின்றனர் நாற்றங்கால் விவசாயிகள். இக்கிராமங்களில் இயங்கும் 200 க்கும் மேற்பட்ட நர்சரி பண்ணைகளில் தற்போது 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரிடையாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர்.

இது போல் தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர். ரோஜா, குண்டுமல்லி, கனகாம்பரம், காக்கட்டான், கோழிகொண்டை உள்ளிட்ட பூஞ்செடிகளும், கொய்யா, சவுக்கை, மா, பலா, வாழை, தேக்கு, பலா, முந்திரி, நெல்லி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கன்று வகைகள் ஆண்டுக்கு பல கோடி இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன

இவற்றை நாடு முழுவதிலும் உள்ள நாற்றங்கால் பண்ணை வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு வாங்கிச்சென்று விற்பனை செய்கின்றனர். புதுச்சேரி, விழுப்புரம்,. சென்னை, ஓசூர், பெங்களூர், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் இயங்கும் 500 க்கும் மேற்பட்ட நாற்றங்கால் பண்ணைகள் இவற்றை நம்பியுள்ளன. மலைவேம்பு உள்ளிட்ட அரிய மர வகை கன்றுகள் சில வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன .

கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டாலும் கடலூர் மாவட்டத்தில் நாற்று உற்பத்தி தொழில் முற்றிலும் முடக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக கடுமையாக வியர்வை சிந்தி உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி கன்றுகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கி கிடக்கின்றன.

அவை அழுகியும் காய்ந்து கருகியும் வருவதால் பெரும் நஷ்டத்தை இப்பகுதி நாற்று உற்பத்தி விவசாயிகள் கண்ணீரோடு எதிர்நோக்கியுள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் கன்றுகள் வழங்குவது நடைமுறையில் உள்ளது. கொரோனா தடையால் திருமண நிகழ்ச்சிகள் நடத்த முடியாததாலும் அந்த வகை விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நகர பகுதிகளில் தள்ளு வண்டிகள், குட்டியானை வாகனங்களில் பூ வகை, மூலிகை செடிகள், பழ வகை , மர வகை கன்றுகள் விற்பனை தொழில்களும் அடியோடு முடங்கி அந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நாற்றங்கால் உற்பத்தியாளர்கள் சங்க மாநில தலைவர் சக்திவேல், மற்றும் நிர்வாகிகள் வேகாகொல்லை அன்புமணி, விஜயராகவன், ராஜகோபால் ஆகியோர் கூறுகையில்,

நாற்றங்கால் உற்பத்தி பணிகள் குடிசை தொழிலாகவே நடைபெற்று வருகின்றன. ஆயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்கு வேலை வாய்ப்பும் இத்தொழில் மூலம் கிடைத்து வருகிறது. கடன் பெற்று தற்போது உற்பத்தி செய்த நாற்றுகள் கொரோனா ஊரடங்கால் பெருமளவில் வீணாகி விட்டதால் பல கோடி ரூபாய் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இங்கு மட்டுமின்றி இங்கு உற்பத்தியாகும் நாற்றுகளை விற்பனை செய்யும் தொழிலாளர்களும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் நாற்று உற்பத்தி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்க வேண்டும்.

வேலை இழந்துள்ள நாற்று உற்பத்தி தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும். ஏரிகளில் செம்மண் அள்ள உடனடி அனுமதி வழங்க வேண்டும். ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த நாற்று உற்பத்தி தொழிலுக்கு வழங்கப்படுவதை போல தமிழ்நாட்டிலும் இலவச மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக குறைந்த கட்டணத்தில் மின்சாரம் வழங்க முன் வரவேண்டும்.

அப்போது தான் இந்திய அளவில் கடலூர் மாவட்டத்திற்கு பெயர் பெற்று தரும் நாற்று உற்பத்தி தொழிலுக்கு மீண்டும் புது வாழ்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News