Kathir News
Begin typing your search above and press return to search.

1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் இருந்த 8 சிலைகளைக் காணோம்!

1000 ஆண்டுகள் பழமையான கோவிலில் இருந்த 8 சிலைகளைக் காணோம்!
X

Yendhizhai KrishnanBy : Yendhizhai Krishnan

  |  17 April 2021 10:04 AM GMT

திருப்பத்தூர் அருகே இரணியூர் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஆட்கொண்ட நாதர் கோவிலில் இருந்த 8 சிலைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.

கோவிலில் உள்ள சிலைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய 1958 மற்றும் 1990ஆம் ஆண்டுக்கான ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்து போது 8 சிலைகள் காணாமல் போனது தெரிய வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த 8 சிலைகளில் சோமாஸ்கந்தர், இஷ்கந்தர், பிரியாவிடை அம்மன், அம்பாள், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், நித்திய உற்சவத்தில் பயன்படுத்தப்படும் சுவாமி மற்றும் அம்பாள் சிலைகள் அடங்கும்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள‌ கோவில்களிலேயே மிகவும் பழமையான கோவிலான ஆட்கொண்ட நாதர் கோவிலில் 1941, 1944 மற்றும் 1948 ஆகிய ஆண்டுகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது இந்த அறநிலையத் துறை அமலக்கப்படுவதற்கு முன் என்பதால் அப்போது கோவில் நிர்வாகக் குழுவில் இருந்தவர்கள் 1948ஆம் ஆண்டு கோவிலில் இருந்த சிலைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்களை எழுதியுள்ளனர்.

ஆனால் அவற்றில் குறிப்பிடப்பட்டு இருந்த பல சிலைகள் 1990ஆம் ஆண்டு வாக்கிலேயே காணாமல் போய்விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தக் கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தொலைந்து போன சிலைகள் 2அடி உயரம் உள்ளவை என்றும் ஆனால் இவை எந்த உலோகத்தால் செய்யப்பட்டவை என்பது குறித்த தகவல்கள் பழைய ஆவணங்களில் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும் இவை திருடப்பட்டனவா, வேறொரு இடத்தில் மறைத்து வைக்கப்பட்டனவா அல்லது அழித்து புதிதாக செய்யப்பட்டனவா என்ற சந்தேகம் நிலவுகிறது. உள்ளூர் ஆட்களை விசாரித்ததில் கடந்த பல ஆண்டுகளில் கோவிலில் திருட்டு எதுவும் நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். அறநிலையத் துறை செயல் அலுவலர் புகார்‌ அளித்ததன் பெயரில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News