இது நடந்தால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் - ரஜினி
இது நடந்தால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் - ரஜினி

கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரசிகர்களை சந்தித்த ரஜினி தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர் எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் நட்சத்திர விடுதியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ரஜினி. அப்போது தனது மாவட்ட செயலாளர்களுடன் தான் விவாதித்த விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
தான் அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தால் தனது மனதில் மூன்று திட்டங்களை வைத்திருந்ததாகவும், அதில் முதல் திட்டமாக ஒவ்வொரு பெரிய கட்சியும் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் கட்சி பதவிகளை கொண்டிருக்கிறது. அந்த பதவிகளில் சிலர் மட்டுமே கட்சி நடத்துவதற்கு தேவை என்றும் இதர பதவிகள் தேர்தல் சமயங்களில் மட்டுமே உதவுவதாகவும் அப்படி பதவியிலிருந்து ஆட்சியைப் படிப்பவர்கள் டெண்டர் முதல் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு சம்பாதிப்பதால், தான் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் சமயங்களில் மட்டும் குறிப்பிட்ட பதவிகளை உருவாக்கிவிட்டு தேர்தல் முடிந்த பின் அந்த பதவிகளை காலி செய்து விடுவது,
இரண்டாவதாக இன்று இருக்கும் மாநில கட்சிகள் அனைத்திலும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள் பெரும்பான்மையானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கின்றனர். எனவே தான் கட்சி ஆரம்பித்தால் அதில் 50 வயதுக்கு குறைவானவர்கள் மட்டுமே இருக்கும்படி செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்ததாகவும்,
மூன்றாவதாக தேசிய கட்சிகளை போல கட்சிக்கு ஒரு தலைமையும் ஆட்சிக்கு ஒருவரும் இருப்பதே சிறந்ததாக இருக்கும் என்று எண்ணிய தான் கட்சியை மட்டுமே வழி நடத்த விரும்புவதாகவும், ஆட்சிக்கு துடிப்புள்ள இளைஞர்கள் கண்டறிந்து கொண்டுவர நினைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் தனது இந்த கொள்கைகளை பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் உடன்படாதது தனக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகவும். இது குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள் பத்திரிக்கை நண்பர்கள் இன்னும் பிற நபர்களிடம் விவாதித்த போது பெரும்பாலும் அவர்களும் இது இன்றைய நடைமுறைக்கு ஒத்துவராது என்று கூறியது தனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் இவ்விரு கட்சிகளுடன் மோதி தேர்தலை சந்திப்பது பெரும் சவாலாக இருக்கும் என்ற காரணத்தால் மக்களிடையே அரசியல், ஆட்சி மாற்றம் குறித்து பெரும் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தனது அரசியல் பிரவேசத்திற்கான நோக்கம் முழுமையடையும் என தெரிவித்துள்ள அவர். செய்தியாளர்கள் மற்றும் ரசிகர்களை தனது கொள்கைகள் குறித்து மக்களிடத்தில் கொண்டு சேர்க்க கோரிக்கை வைத்தார். அவ்வாறு மக்களிடத்தில் தனது கொள்கைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே தனது அரசியல் பிரவேசம் குறித்து முடிவெடுப்பதாக கூறினார்.
இதன் மூலம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த நிலை ரசிகர்களை மேலும் குழப்பமடைய செய்துள்ளது. ரஜினியின் இந்த ஆட்சிக்கு ஒருவர் கட்சிக்கு ஒருவர் என்ற கொள்கை மக்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா? அவர் கூறுவது போல் காலம் தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்.