ரூ.11,200 கோடி மதிப்பிலான திட்டங்கள்.. நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..
By : Bharathi Latha
மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.11,200 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி 29.09.24 அன்று காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் இரண்டு நாட்களுக்கு முன்பு மோசமான வானிலை காரணமாக புனேவில் தமது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தார். மேலும் இன்றைய மெய்நிகர் நிகழ்வுக்கு வழவகுத்த தொழில்நுட்பத்தை அவர் பாராட்டினார். சிறந்த ஆளுமைகளுக்கு உத்வேகம் அளிக்கும் இந்த நிலம் மகாராஷ்டிரா வளர்ச்சியின் புதிய அத்தியாயத்தைக் காண்கிறது என்று அவர் கூறினார். ஸ்வர்கேட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் புனே மெட்ரோ பிரிவு தொடங்கப்பட்டதையும், புனே மெட்ரோ முதல் கட்டத்தின் ஸ்வர்கேட் – கத்ராஜ் விரிவாக்கப் பணிக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதையும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பிதேவாடாவில் கிராந்திஜோதி சாவித்ரிபாய் புலே முதல் பெண்கள் பள்ளியில் நினைவு வளாகத்திற்கு அடிக்கல் நாட்டியது குறித்தும் அவர் பேசினார். புனேயில் வாழ்க்கையை எளிதாக்கும் நடைமுறைகளை அதிகரிப்பதில் ஏற்பட்டுள்ள வேகமான முன்னேற்றம் குறித்து அவர் திருப்தி தெரிவித்தார்.
பகவான் விட்டலின் பக்தர்களுக்கு இன்று ஒரு சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது என்று கூறிய பிரதமர், சோலாப்பூர் நகருடன் நேரடி விமான இணைப்பை ஏற்படுத்துவதற்காக விமான நிலையம் திறக்கப்பட்டதைக் குறிப்பிட்டார். தற்போதுள்ள விமான நிலையத்தின் மேம்படுத்தல் பணிகள் நிறைவடைந்த பின்னர் முனையத்தின் திறன் அதிகரிக்கும் என்று அவர் கூறினார். பயணிகளுக்காக புதிய சேவைகள், வசதிகள் உருவாக்கப்பட்டு, பகவான் விட்டலின் பக்தர்களுக்கு வசதி அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையம் வணிகங்கள், தொழில்கள், சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறிய அவர், இன்றைய வளர்ச்சித் திட்டங்களுக்காக மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
இன்று, மகாராஷ்டிராவுக்கு புதிய தீர்மானங்களுடன் பெரிய இலக்குகள் தேவைப்படுகின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், புனே போன்ற நகரங்களை முன்னேற்றம், நகர்ப்புற வளர்ச்சியின் மையமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். புனேயின் முன்னேற்றம் மற்றும் வளர்ந்து வரும் மக்கள் தொகையின் அழுத்தம் குறித்து பேசிய பிரதமர், வளர்ச்சி, திறனை அதிகரிக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றார். இந்த இலக்கை அடைய, தற்போதைய மாநில அரசு புனேவின் பொதுப் போக்குவரத்தை நவீனமயமாக்கும் அணுகுமுறையுடன் செயல்பட்டு வருவதாகவும், நகரம் விரிவடைவதால் இணைப்புக்கு ஊக்கம் அளிப்பதாகவும் பிரதமர் கூறினார்.
Input & Image courtesy: News